பிரான்சிற்கு சென்று உயிரிழந்த மருமகனின் உடலை தாயகம் கொண்டு வர கோரி மாமனார் மனு
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள எனது மகள் இந்த செய்தி அறிந்து வேதனையில் உள்ளார்.
தஞ்சாவூர்: பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு சென்று உயிரிழந்த தன் மருமகனின் உடலை தாயகம் கொண்டு வர கோரிக்கை விடுத்து தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் தளிக்கோட்டையை சேர்ந்த முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் தளிக்கோட்டையை சேர்ந்த கஜேந்திரன் (62) என்பவர் தனது மகள் சார்பில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எனது மருமகன் சிலம்பரசன் (39). இவர் கடந்த 12.2.2024ம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்காக சென்றார். அங்கு கடந்த 25ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக பிரான்ஸ்சில் உள்ள எங்கள் ஊரை சேர்ந்த வாலிபர் மூலம் தகவல் தெரிய வந்தது. எனது மருமகன் உடலை தாயகம் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கஜேந்திரன் தெரிவிக்கையில், எனது மகள் தணிகை (36). எனது மருமகன் சிலம்பரசன். இவர்களுக்கு 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 12ம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்காக சிலம்பரசன் புறப்பட்டு சென்றார். அங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கடந்த 25ம் தேதி அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக அங்குள்ளவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள எனது மகள் இந்த செய்தி அறிந்து வேதனையில் உள்ளார். எனது மருமகனின் உடலை தாயகம் கொண்டு வர உதவி செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.
தஞ்சை மாவட்டம் ஆண்டிவயல் கிராமத்தில் ஆதிதிராவிட நலப்பள்ளி கட்டப்பணிக்கு குளத்தில் இருந்து மணல் அள்ளிக் கொள்ள அனுமதிக்க கோரிக்கை விடுத்து தஞ்சை கலெக்டரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிவயல் கிராமத்தில் புதிதாக ஆதிதிராவிட நலப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மட்டத்தை நிரப்புவதற்கு மணல் தேவைப்படுகிறது.
144 கொள்ளுக்காடு வருவாய் கிராமம் ஆண்டிவயல் அருகிலுள்ள ஆண்டி குளத்தில் இருந்து டிராக்டர் மூலமாக சுமார் 100 டிராக்டர் மணல் அள்ளிக்கொள்ள தாங்கள் அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் புறம்போக்கில் 11 குடும்பத்தை சேர்ந்த நாங்கள் 80 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். குடிநீர், சாலை, மின்விளக்கு என எவ்வித வசதிகளும் இன்றி மிகவும் பரிதாபமான சூழலில் நாங்கள் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் 30 குழந்தைகளும் உள்ளனர். மழைக்காலத்தில் நாங்கள் இருந்து வரும் பகுதியை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். விஷ பூச்சிகளும் அதிகளவில் வந்துவிடுகிறது,
இதனால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் இருந்து வருகிறோம். எனவே எங்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி, மின்சாரம், சாலை வசதி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.