காத்திருப்பு போராட்டத்திற்கு வெற்றி... தண்ணீர் வராவிட்டால் சாலைமறியல் ஸ்டார்ட்: விவசாயிகள் உறுதி
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் விவசாயிகள் நடத்திய காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிற்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்து விடுங்க...!
திருச்சி மாவட்டம், வாழவந்தான் கோட்டையில் இருந்து தண்ணீர் திறந்து இரண்டு மாதங்கள் கடந்தும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதி புதிய கட்டளை மீட்டு வாய்க்கால் மற்றும் உயர்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த உறுதி மொழியை எடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
பல முறை மனு அளித்தும் பலனில்லையே
மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் விவசாயிகள் பலமுறை மனு அளித்தனர். இருந்த போதிலும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவில்லை. பலமுறை வலியுறுத்தியும் தண்ணீர் திறந்து விடாததால் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் தண்ணீர் திறந்து விடும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
காத்திருப்பு போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்
உடன் தண்ணீர் வழங்க வேண்டும். விவசாயிகள் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி கட்டளை மேட்டுக் கால்வாயில், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில், விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை கடந்த வியாழக்கிழமை தொடங்கினர்.
நேற்றும் 2வது நாளாக மாலை 6 மணி வரையிலும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி, அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ரெங்கசாமி, தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பாஸ்கர், தமிழரசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நந்தகுமார், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் திருஞானம், ஒன்றிய துணை பெருந்தலைவர் கோவி.க.சுப்பு, வி.தொ.ச மாவட்ட நிர்வாகி வெ.ஜீவகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராமச்சந்திரன் மற்றும் ஊராட்சித் தலைவர்கள் என 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2ம் நாளில் விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி
இதையடுத்து திருச்சி பாசனக்கோட்ட எஸ்.டி.ஓ ராஜரத்தினம், பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப் மற்றும் போலீசார் போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே கருங்காலப்பள்ளியில் தண்ணீர் திறந்து விட இடையூறாக இருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு, தற்போது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முழு கொள்ளளவு தண்ணீர் பாசனத்திற்கு விரைவில் திறந்து விடப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்தனர்.
தண்ணீர் வரலைன்னா சாலைமறியல்தான்
தொடர்ந்து முழு கொள்ளளவு தண்ணீர் திறந்து விடப்படாவிட்டால் மீண்டும் திங்கட்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு காத்திருப்பு போராட்டத்தை விலக்கி கொண்டனர்