முறைகேடுகள் இல்லாமல் முறையாக நடத்தணும்... விவசாயிகள் வலியுறுத்தியது எதை?
தூர்வாரும் பணிகளில் வரலாறு காணாத அளவில் மோசடி நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அனுமதியோடு வருவாய் கோட்டாட்சியின் தலைமையில் பறக்கும் படை அமைக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தூர் வாரும் பணிகளை முறைகேடுகள் இல்லாமல் முறையாக நடத்த வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் இலக்கியா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
ஆம்பலாப்பட்டு தங்கவேல்: பட்டுக்கோட்டை -பாப்பாநாடு - ஆம்பலாப்பட்டு வழித்தடத்தில் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வந்தது. இந்த பேருந்து பழுதடைந்ததால் தினம் ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி. குறைந்த படிப்பறிவு உள்ள ஏழைகள் தினம் ஒரு பேருந்து வருவதால் குழப்பம் அடைந்து வருகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் நிரந்தர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ கே ஆர். ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து இடத்திலும் நீர்வளத்துறை மூலம் தூர் வாரும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆனால் இந்தப் பணிகள் 5 சதவீதம் கூட முழுமையாக நடைபெறவில்லை. இந்த தூர்வாரும் பணிகளில் வரலாறு காணாத அளவில் மோசடி நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அனுமதியோடு வருவாய் கோட்டாட்சியின் தலைமையில் பறக்கும் படை அமைத்து தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். முன்பு விவசாயிகள் குழு அமைத்து தூர்வாரும் பணிகள் கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு செய்யப்படவில்லை. தூர்வாரும் பணிகள் முறைகேடு இன்றி நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தனித்துவமாய்ந்த அடையாள அட்டைகளை மத்திய அரசு வழங்குவதாக அறிவித்து விவசாயிகளும் விபரங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஆதார் அட்டை போல விவசாயிகளுக்கு வழங்கப்படும் தனித்துவம் வாய்ந்த அட்டை இல்லாதவர்களுக்கு எவ்வித செலவையோ கடனோ கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. பதிவு செய்து விவசாயிகளுக்கு குறுஞ்செய்தியில் பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. எனவே பதிவு என்னுடன் கூடிய தற்காலிக அடையாள அட்டையை வழங்க வேண்டும்.
பாச்சூர் புண்ணியமூர்த்தி: வரும் குறுவை சாகுபடி பருவத்திற்கு குறுவை தொகுப்பு, சாகுபடி செய்யும் பரப்பளவிற்கு வரம்பு இல்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் தான் 10 ஏக்கருக்கும் குறைவில்லாமல் சாகுபடி செய்கின்றனர். எனவே குறைந்தபட்சம் 10 ஏக்கருக்காவது குறுவைத் தொகுப்பை வழங்க வேண்டும். பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்பலாப்பட்டு மாதவன்: ஒரத்தநாடு அருகில் நெடுவாக்கோட்டை கிராமத்தில் தரகர்கள் மூலம் வடமாநில தொழிலாளர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய சம்பளத்தை தரகர்கள் வழங்குவதில்லை என தெரிய வருகிறது. எனவே அரசிடம் தரகர்கள் பதிவு செய்து தரகு கமிஷனை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்: கடந்த டிசம்பர் மாதம் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை அதனை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த நிதிநிலை அறிக்கையில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 390 அறிவித்தார்கள். அதற்கு உண்டான அரசாணையை விரைவில் வெளியிட்டு கரும்பு விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் ஆரம்பித்து விட்டதால் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்க வேண்டும். அதேபோல டிரான்ஸ்பார்மர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டதனால் ஒரே நாளில் சீர் செய்து கொடுக்க வேண்டும். குருங்குளம் கிழக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் பார்வையிடப்பட்டது. அந்த இடத்தை தேர்வு செய்து உள்ளதால் விரைவாக அந்த இடத்தை சர்வேயர் மூலமாக அளந்து கொடுக்க வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட வேண்டும். கொல்லங்கரையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதையும் பார்வையிட்டு விரைவாக நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குருங்குளம் மேற்கு தோழகிரிப்பட்டி காட்டுவாரியில் தடுப்பணை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்தார்கள் ஆனால் அந்த பணி நடைபெறாமல் இருக்கிறது அதனை விரைவாக முடிக்க வேண்டும்.
பாஸ்கர் : செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் அதிக அளவு மண் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கை பேரிடர் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரும் பணியை முழுமையாக நடத்த வேண்டும்.
பெரமூர் அறிவழகன் : அனைத்து வேளாண்மை கிடங்குகளிலும் விவசாயிகள் வாங்கும் விதைகளுக்கு மின்னணு மற்றும் பண பரிவர்த்தனை இரண்டும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் கிடங்குகளில் விவசாயிகளுக்கு தேவையான குறுவைக்கு திருவையாறு பகுதிகளில் ஏ எஸ் டி 16, கோ 51 விதை நெல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்
கூட்டத்தில் தஞ்சை மாவட்டம் சக்கரசாமந்தம் பகுதியில் தனியார் தார் ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியர் இலக்கியாவிடம் மனு அளித்தனர்.





















