(Source: ECI/ABP News/ABP Majha)
ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் ரயில் இயக்க வலியுறுத்தல்
அடுத்த வாரம் காசியில் நடக்க உள்ள 2-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பகுதியாக ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில், காசி தமிழ் சங்கமம் ரெயில் தொடங்கினால் சிறப்பாக அமையும்.
தஞ்சாவூர்: கன்னியாகுமரி - வாரணாசி இடையே ரயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதேபோல் காசியில் நடக்க உள்ள 2-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பகுதியாக ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில், காசி தமிழ் சங்கமம் ரெயில் தொடங்கினால் சிறப்பாக அமையும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புனிதநகரமான வாரணாசியில், கலாச்சார நிகழ்ச்சியான காசி தமிழ் சங்கமத்தின் 2-வது பதிப்பு வரும் 17-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இவர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஷ்வினிவைஷ்ணவ் தமிழகத்தில் இருந்து காசிக்கு நேரடி ரெயில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் இயக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கு காசி தமிழ்சங்கமம் என்ற பெயரில் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் செயலாளர் கிரி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி வாரணாசி இடையே ரெயில் இயக்க ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. வரவேற்கிறோம். இந்த ரெயில்களை ஏற்கனவே ஆன்மிக தலங்கள் வழியாக ரெயில் இயக்கவேண்டும் என்று மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், காஞ்சி சங்கராச்சாரியார் விஜேயந்திர சரஸ்வதி சாமிகள் மற்றும் தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் மத்திய தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் எல்.முருகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து கன்னியாகுமரி-வாரணாசி இடையே காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ரெயில் (16367) வியாழக்கிழமை தோறும் கன்னியாகுமரியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், பெரம்பூர் வழியாக வாரணாசிக்கு சென்றடையும்.
இதே போல் மறுமார்க்கமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் கன்னியாகுமரியை வந்தடையும். இந்த ரெயிலானது நிர்வாகம் நடைமுறைக்கு பின் ரெயில் இயக்கம் தொடக்கம் குறித்து விரைவில் தெற்கு ரெயில் அறிவிப்பு வெளியிடும். அடுத்த வாரம் காசியில் நடக்க உள்ள 2-வது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் பகுதியாக ஆன்மிக தலங்களை இணைக்கும் வகையில், காசி தமிழ் சங்கமம் ரெயில் தொடங்கினால் சிறப்பாக அமையும். தென் மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக காசிக்கு ரெயில் இயக்குவதற்கு தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் மற்றும் பயணிகள் சார்பில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர், தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் மற்றும் தென்னக ரயில்வே தலைமையகம், திருச்சி கோட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.