வேண்டாங்க... பேரூராட்சி ஆக்காதீங்க... பூதலூர் மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு
தஞ்சாவூர் மாவட்டத்திலேயே வறட்சியான மிகவும் பிந்தங்கிய கிராமம் பூதலூர் கிராமம்தான். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். விவசாயத்தை தவிர வேறு தொழில் ஏதும் கிடையாது.
தஞ்சாவூர்: விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் பூதலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திலேயே வறட்சியான மிகவும் பிந்தங்கிய கிராமம் பூதலூர் கிராமம்தான். விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கிறார்கள். விவசாயத்தை தவிர வேறு தொழில் ஏதும் கிடையாது. மேலும் ஒரு போகம் மட்டுமே விவசாயம் நடைபெறுகிறது. இதை தவிர்த்து 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்து வருகிறது.
இந்த வேலை இல்லாத நாட்களில் திருச்சி, தஞ்சைக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலைதான் உள்ளது. இங்குள்ள கூலித் தொழிலாளர்கள் பலருக்கு அரசு தொகுப்பு வீடு கூட கிடைக்கவில்லை. கிராமப்புற நலிவடைந்த மக்களுக்கான அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடையவில்லை. இருப்பினும் தாலுகா மருத்துவமனை, தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், பத்திர பதிவுத்துறை அலுவலகம், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கல்லூரி போன்றவை மக்கள் பிரதிநிதிகளின் முயற்சியால் பூதலூர் பகுதிக்கு கிடைத்துள்ளது.
இருப்பினும் பலர் குடிமனைப்பட்டா கிடைக்காமல் தொடர்ந்து மனு கொடுத்து கொண்டே இருக்கின்றனர். அரசு தொகுப்பு வீடு இடிந்று விழும் நிலையில் உள்ளது. மறு சீரமைப்பிற்கு வழியில்லை. எனவே மிகவும் சாதாரணமாக வாழ்க்கை வாழ்ந்து வரும் பூதலூர் மக்களுக்கு அரசு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்க வேண்டும்.
பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதன் மூலம் கட்ட வேண்டிய வரியை கூட கட்ட இயலாது. முழுக்க முழுக்க விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த தொழிலையும், 100 நாள் வேலையையும் நம்பி இருக்கும் பூதலூர் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றும் அரசின் முயற்சியை கைவிட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை கொல்லைக்காடு பகுதியில் மயான சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
எங்கள் ஊர் மயான சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்டது. இதில் ஒரு கிலோ மீட்டர் அளவுக்கு ஓர் அடுக்கு கப்பி சாலை அமைக்க பட்டுள்ளது மீதம் உள்ள சாலையை சீரமைத்து அமைத்து தரவேண்டும். மேலும் இந்த சாலையின் இடையில் பாலம் கல்வெர்ட் அமைத்து தர வேண்டும்.
இந்த சாலை மயான சாலை மட்டும் அல்லாமல் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு சென்று வர பயன்படுகிறது. எங்களின் நீண்ட கால இந்த கோரிக்கையை நிறைவேற்றி தர கேட்டுக் கொள்கிறோம். பல முறை இதுகுறித்து மனுக்கள் அளிக்கப்பட்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. எனவே தயவு செய்து இந்த மயான சாலையை சீர் அமைத்து தருமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி பகுதியை முருகன் என்பவரின் மனைவி சுகன்யா உட்பட 8 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
நாங்கள் குருவாடிப்பட்டி, கல்விராயன்பேட்டை மாதாகோவில் தெருவில் வசித்து வருகிறோம். சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வரும் நாங்கள் கூலித் தொழிலாளர்கள். எவ்வித வசதியும் எங்களுக்கு இல்லை. 8 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் உள்ளோம். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.