நிதி நிறுவனத்திற்கு தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வைத்த "குட்டு"
தஞ்சாவூரில் வீடு கட்ட கடன் வாங்கியவர் இறந்ததால், காப்பீடு தொகை வழங்க தனியார் நிதி நிறுவனம் மறத்துவிட்டது.
தஞ்சாவூர்: கடனாளி பெயரில் காப்பீடு செய்யாமல், இணைக் கடனாளியான அவரது மனைவி பெயரில் காப்பீடு செய்துள்ளது சேவை குறைபாடு என்று நிதி நிறுவனத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் குட்டு வைத்துள்ளது.
தஞ்சாவூரில் வீடு கட்ட கடன் வாங்கியவர் இறந்ததால், காப்பீடு தொகை வழங்க தனியார் நிதி நிறுவனம் மறத்துவிட்டது. இதையடுத்து நுகர்வோர் நீதிமன்றம் வழக்கை விசாரித்து ரூ.23.20 லட்சம் வழங்க நிதி நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் இறந்து விட்டார்
தஞ்சாவூர் காட்டுத்தோட்டம் தியாகராஜன் கார்டன் நகரில் வசிப்பவர் ஜோதி. இவரது கணவர் ராஜாங்கம். வீடு கட்டுவதற்காக சோழமண்டலம் நிதி நிறுவனத்தில் உரிய ஆவணங்களை வழங்கி ரூ.25.50 லட்சம் கடனாக ராஜாங்கம் பெயரில் பெற்றுள்ளார். அப்போது ரூ.60 ஆயிரம் காப்பீடு தொகையாக நிதி நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடன் பெற்ற ராஜாங்கம் கடந்த 8.11.2022ம் ஆண்டு இறந்துவிட்டார். இதையடுத்து ஜோதி நிதி நிறுவனத்தை அணுகி காப்பீடு தொகையை கடன் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளுமாறு முறையிட்டுள்ளார். அப்போது நிதி நிறுவனத்தினர் காப்பீடு தொகை இணை கடனாளியான ஜோதி பெயரில் உள்ளதால், ராஜாங்கம் பெயரில் உள்ள கடன் கணக்கில் வரவு வைக்க முடியாது என கூறிவிட்டனர். மேலும் வீட்டை ஜப்தி செய்வதாக கூறி, அனைத்து கடன் தொகையையும் வசூல் செய்துள்ளனர்.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பு
இதையடுத்து ஜோதி தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரினை விசாரித்த ஆணையம், கடனாளி பெயரில் காப்பீடு செய்யாமல், இணைக் கடனாளியான அவரது மனைவி பெயரில் காப்பீடு செய்துள்ளது சேவை குறைபாடு.
எனவே பாதிக்கப்பட்ட ஜோதிக்கு நிதி நிறுவனம் காப்பீடு தொகையான ரூ.22,10,542ம், மன உளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.1 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.23.20 லட்சத்தை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என ஆணையத்தின் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி ஆகியோர் தீர்ப்பு கூறினர்.