(Source: ECI/ABP News/ABP Majha)
லாரி பாரம் தாங்காமல் உடைந்த 20 ஆண்டுகால வாய்க்கால் பாலம் - தஞ்சையில் மக்கள் அவதி
தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் மெலட்டூர் பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்காலில் அமைந்துள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன் பேட்டை பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாசன வாய்க்கால் பாலம், லாரியின் பாரம் தாங்காமல் இடிந்தது. பாலத்தின் இடிபாடுகளில் லாரி சிக்கிக் கொண்டது. இதனால் இந்த பாலம் வழியாக விவசாய வேலைகளுக்கு செல்பவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மிகவும் பழமையான பாலம்
தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் மெலட்டூர் பாசன வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த பாசன வாய்காலில் அமைந்துள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளது. இங்கு நடக்கும் சாகுபடி பணிகளுக்கு இந்த பாலத்தின் வழியாகத்தான் நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், டிராக்டர் வாகனங்களை விவசாயிகள் இயக்கி வருகின்றனர். விவசாய பணிகளுக்கு இந்த பாலம்தான் மிகவும் உறுதுணையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விவசாய பணிகளுக்கு இந்தப் பாலம் வழியே செல்லும் விவசாயிகள்
அறுவடை முடியும் நேரத்தில் வயல்களில் இருந்து நெல் மூட்டைகளை விவசாயிகள் இந்த பாலம் வழியாகத்தான் எடுத்து வருவர். இதனால் விவசாயிகளுக்கு இந்த பல மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆனதால், பாலம் வலுவிழந்த பழுதடைந்துள்ளது. இதனால் பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற நிலை ஏற்பட்டதால் உடனடியாக பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்டித் தரவேண்டும் என அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகத்திடம் விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்துள்ளனர்.
லாரி பாரம் தாங்காமல் இடிந்து விழுந்த பாலம்
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மூங்கில் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று இந்த பாலத்தை கடக்க முயன்றது. ஆனால் லாரியின் பாரம் தாங்காமல் பாலம் இடிந்து உள்வாங்கியது. இதனால் லாரி பாலத்தின் இடிபாடுகளில் கொண்டது. இதனால் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாலம் கட்டி தர கோரிக்கை
தற்போது தண்ணீர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் தங்களின் வயல்களை உழும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனால் இந்த பாலம் தற்போது இடிந்து விழுந்து உள்ள நிலையில் இப்பகுதி விவசாயிகள் சாகுபடி உட்பட பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் ஆய்வு செய்து புதிய பாலம் கட்டித் தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.