தூக்கில் தொங்கிய பீகார் தொழிலாளி... மருத்துவமனையில் குவிந்த வடமாநிலத்தவர்களால் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பீகார் மாநில தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பீகார் மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து நுாற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பீகார் மாநில தொழிலாளி, துாக்கிட்டு இறந்த நிலையில், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, கூறி, சுமார் நுாற்றுக்கணக்கான பீகார் மாநில தொழிலாளர்கள் , பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திரண்டனர்.
பீகார் மாநிலம், சுபால் மாவட்டம், குமியாஹி பகுதியை சேர்ந்த தப்ராஜ் ஆலம் (22). இவரது மனைவி ஜஹானாபர்பின். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தப்ராஜ் ஆலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அணைக்காடு கிராமத்தில், கட்டுமான பணிக்காக வந்தார். அதே பகுதியில் வாடகை ஒன்றை வீட்டிற்கு எடுத்து, தமிழகத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளிகளுடன் வசித்து வந்தார்.
வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு, தப்ராஜ் ஆலம் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் சாப்பிட்டு விட்டு, தப்ராஜ் ஆலம் ஒரு தனி அறையிலும், மற்ற இரண்டு பேரும் அறையின் வெளியே படுத்து தூங்கினர். இந்நிலையில் நேற்று காலை தப்ராஜ் ஆலம், மின்விசிறியில் வேட்டியை கொண்டு தூக்கிட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடன் தங்கியிருந்த இரண்டு தொழிலாளர்களும், வீட்டின் உரிமையாளர் மற்றும் மேஸ்திரிக்கு தகவல் அளித்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், விரைந்து வந்தனர். தொடர்ந்து தப்ராஜ் ஆலம் உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தப்ராஜ் ஆலமின் அண்ணன், அவருடன் வேலை பார்க்கும் மற்றும் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் தங்கி வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், தப்ராஜ்ஆலமின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தப்ராஜ் ஆலம் சகோதரர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





















