வரத்து குறைந்தது... விலை உயர்ந்தது: நான்கு மடங்கு விலை அதிகரித்த பீன்ஸ்
வெயிலால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு தஞ்சாவூருக்கு பீன்ஸ் வரத்து குறைந்துள்ளது. இதனால் பீன்ஸ் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தஞ்சாவூர்: வெயிலால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு தஞ்சாவூருக்கு பீன்ஸ் வரத்து குறைந்துள்ளது. இதனால் பீன்ஸ் விலை அதிகரித்து 1 கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். ஏற்கனவே மற்ற காய்கறிகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் தற்போது பீன்ஸ் விலை ராக்கெட் அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது.
ஆரோக்கியமான வாழ்வுக்கு காய்கறிகள் உதவும்
ஆரோக்கியமான வாழ்வு வாழ முக்கிய காரணமாக அமைவது நமது உணவுகள்தான். பாரம்பரியமாக நமது உணவு பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி அமைந்துள்ளன. முக்கியமாக உணவில் காய்கறிகள் சேர்த்து சாப்பிடுவதும், எந்ததெந்த காய்கறிகளில் அதிகளவு ஊட்டச்சத்து இருக்கிறதோ அதை உணவில் கூடுதலாக எடுத்துக் கொள்வது குறித்து நம் முன்னோர்கள் நன்கு அறிந்திருந்தனர். இதனால் சாப்பாட்டில் காய்கறிகள் தான் முக்கிய இடம் வகிக்கிறது. காய்கறிகளில் உள்ள சத்துக்கள் உடலில் பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கக்கூடியது. ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு நன்மையை கொடுக்கிறது. அவற்றில் பீன்ஸில் உள்ள புரதச்சத்து உடலை பராமரிப்பதிலும், உடலில் ஏற்படுகிற பல்வேறு பிரச்சினைகளை சரி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பீன்ஸ்சில் உள்ள நன்மைகள்
பீன்ஸ்சில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதனை குழந்தைகள், சிறுவர்கள் யாரும் விரும்பி சாப்பிடுவதில்லை. பீன்ஸ் நன்மை குறித்து தெரிந்தவர்கள் மட்டும் பீன்ஸ் மூலம் பல்வேறு வகையான உணவு பொருட்களை தயாரித்து சாப்பிட்டு வருகின்றனர். தஞ்சாவூருக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அதே போல் இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
ரூ.30க்கு விற்றது இப்போது ரூ.140 ஆக உயர்வு
தஞ்சாவூரில் கடந்த மாதம் பீன்ஸ் விலை குறைந்து காணப்பட்டது. தற்போது கொளுத்தி வரும் வெயில் காரணமாக பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பீன்ஸ் வரத்தும் குறைந்துள்ளது. தஞ்சாவூரில் கடந்த மாதம் இறுதியில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.30க்கு விற்பனையானது. வரத்து குறைய தொடங்கியதில் இருந்து அதன் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் பீன்ஸ் 1 கிலோ ரூ.140க்கு விற்பனையானது. அதே போல் மற்ற காய்கறிகளும் கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளது. தக்காளி வழக்கமான அளவு வந்து கொண்டிருப்பதால் 1 கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூருக்கு ஒசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பீன்ஸ் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பீன்ஸ் விளையும் பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயில் கொளுத்தி வருவதாலும் பீன்ஸ் பூக்கள் உதிர்ந்து விடுகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கு விற்பனைக்காக பீன்ஸ் 150 மூட்டைகள் வரை வரும்.
வரத்து குறைந்தது... விலை உயர்ந்தது
ஆனால் வரத்து குறைவால் 50 முதல் 60 மூட்டைகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் விலை அதிகரித்துள்ளது. அதேபோல் மார்க்கெட்டில் பீன்ஸ் மூட்டை வந்து இறங்கிய உடனே போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கி சென்று விடுகின்றனர். அதுவும் குறைந்த அளவிலே கிடைக்கும் பீன்சும் குறிப்பிட்ட நேரத்திற்கு விற்று தீர்ந்து விடுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் குறைவான அளவில் இருக்கின்றன. வெயில் குறைந்து மழை தொடங்கினால் மட்டுமே பீன்ஸ் விலை குறையும். இனி வரும்வாரங்களில் விளைச்சல் பாதித்தால் பீன்ஸ் விலை ரூ.200 வரை விற்பனையாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.