தஞ்சையில் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற கல்லுக்குளம் மருத்துவருக்கு பாராட்டு விழா
தமிழக அளவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற கல்லுகுளம் மருத்துவருக்கு பாராட்டு விழா நடந்தது.
தஞ்சாவூர்: தமிழக அளவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறந்த மருத்துவருக்கான விருது பெற்ற கல்லுகுளம் மருத்துவருக்கு பாராட்டு விழா நடந்தது. மேலும் 312 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற சீனிவாசபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுழற்கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விருது பெற்ற மருத்துவருக்கு பாராட்டு விழா
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவருக்கான விருதினை பெற்ற மருத்துவர் முத்துக்குமாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற சீனிவாசபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்க்கு சுழற்கேடயம் வழங்கினார். இதில் மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ்காந்தி முன்னிலை வகித்தார். மருத்துவர் முத்துக்குமார் 15 ஆண்டுகள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் பணியாற்றி வருகிறார்.
மருத்துவர் முத்துக்குமாரின் சிறப்பான பணிகள்
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார் மருத்துவர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொடர்ந்து 5 மாதங்களாக தமிழ்நாட்டிலேயே தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தனர். மேலும் தேசிய தரச்சான்றிதழ் டெல்லி குழுவினரால் வழங்கப்பட்டு ரூ.3 லட்சம் பரிசு தொகையையும் பெற்றுள்ளனர். இவரது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய சேவையால் தொடர்ந்து கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் புறநோயாளிகள், உள் நோயாளிகள், மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விருது, பாராட்டுச்சான்றிதழ் வழங்கிய அமைச்சர்
மேலும் கல்லுக்குளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கான 'தாய்மை நூலகம்' அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளுக்கான 'அக்கறை' சிறப்பு பிரிவு இவரால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய மருத்துவ தினத்தையொட்டி சென்னை கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் மருத்துவர் முத்துக்குமார் சேவையை போற்றும் விதமாக அவருக்கு தமிழ்நாட்டிலேயே சிறந்த மருத்துவருக்கான விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
சீனிவாசபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் முதலிடம்
இதேபோல் தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை கடந்த 2023 ஆகிய ஏப்ரல் மாதம் முதல் ஆரம்ப சுகாதாரநிலைய செயல்பாடுகள் அடிப்படையில் தரவரிசை பட்டியலை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 312 நகர்புற ஆரம்பசுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் கல்லுக்குளம், கரந்தை, மகர்நோம்புசாவடி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய 4 நகர்புற ஆரம்பசுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் குறிப்பாக புறநோயாளி வருகை, உள் நோயாளி அனுமதி, நகர்புற ஆரம்பசுகாதார நிலையங்களின் பிரசவ எண்ணிக்கை, ஆய்வக பரிசோதனைகள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் பரிசோதனை, கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு கருத்தரித்தவுடன் 12 வாரத்திற்குள் கர்ப்பிணி தாய்மார்களின் பதிவு, இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல் போன்றவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு 312 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான தரவரிசை பட்டியல் சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஏப்ரல் 2024 மாதத்திற்கான தரவரிசை பட்டியலில் சீனிவாசபுரம் நகர்புற ஆரம்பசுகாதார நிலையம் தமிழ்நாடு அளவில் முதலிடத்தை பெற்று தஞ்சாவூர் மாநகராட்சிக்கு பெருமை சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாநகராட்சி சீனிவாசபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பான சேவை வழங்கி வருவதில் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி சீனிவாசபுரம் நகர்புற ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் சிவகாமசுந்தரியை நேரில் அழைத்து தர வரிசை பட்டியலில் முதலிடம் பெற்றமைக்காக சுழல் கேடயம் வழங்கினார்.