தொழிலாளர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்
ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் சம்மேளனம் துவக்கப்பட்ட 80வது ஆண்டு விழா நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.

தஞ்சாவூர்: ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், ஏழு மணி நேர வேலை உள்ளிட்ட தொழிலாளர்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தஞ்சையில் நடைபெற்ற உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் 80வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள நாடுகளில் வளர்ந்து வருகின்ற தொழில் வளர்ச்சி, தொழிலாளர்களின் பணி நிலைமை, சுகாதாரம், மனித வள மேம்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 1945 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாடு நடைபெற்றது. அன்றைய தினம் உலகத் தொழிலாளர்களை ஒன்று படுத்துவதற்காகவும், அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப் பதற்காகவும் உலக தொழிற்சங்க சம்மேளனம் 1945 அக்டோபர் 3ஆம் தேதி அன்று துவக்கப்பட்டது.
தற்போது உலக தொழிற்சங்க சம்மேளனத்தில் 105 நாடுகளைச் சேர்ந்த 210 தொழிற்சங்கங்கள் மற்றும் 78 மில்லியன் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கங்கள் சார்பில் சம்மேளனம் துவக்கப்பட்ட 80வது ஆண்டு விழா நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏஐடியுசி மாநிலச் செயலாளர் ஆர்.தில்லைவனம், சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்வில் இன்றைய விலைவாசிக்கு உயர்வுக்கு இணையாக தகுந்த ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பாதுகாப்பு, ஏழு மணி நேர வேலை, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட வாழ்விற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஒன்றிய-மாநில அரசுகள் செய்து கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், ஐஎல்ஓ இணக்க விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பேச்சுரிமை கருத்தரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டது. உக்ரைன்-ரஷ்யா போரினையும், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேல் போரினையும் ஐநா மன்றம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
முடிவில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்போம், போர் இல்லாத உலகத்தினையும் படைத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டது. விழா நிகழ்ச்சியில் ஏஐடியுசி, சிஐடியு,எச்எம்எஸ் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.





















