(Source: ECI/ABP News/ABP Majha)
உத்தமரான ஸ்டாலின்... எலி குட்டியான உதயநிதி ஸ்டாலின் - திண்டுக்கல் சீனிவாசன்
நீங்கள் மட்டுமே பேசி சென்றால் என்ன அர்த்தம், அதிருப்தியில் உள்ள தொண்டர்களை பேச வையுங்கள், அப்போது தான் கட்சியில் உள்ள குறைகள் தெரியும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர், மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த அ.தி.மு.க., கள ஆய்வுக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசனிடம் கட்சி நிர்வாகிகள் கடும் வாக்குவாதத்தில் இறங்கியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அதிமுக ஆய்வுக்கூட்டம் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாரதிமோகன் தலைமையில் நடந்தது. இதில், அமைப்புச் செயலாளர் மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், தங்கமணி, சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேச துவங்கினார். அப்போது முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் அம்பிகாபதி, கள ஆய்வுக்கு வந்த உள்ள நீங்கள் மட்டுமே பேசி சென்றால் என்ன அர்த்தம், அதிருப்தியில் உள்ள தொண்டர்களை பேச வையுங்கள், அப்போது தான் கட்சியில் உள்ள குறைகள் தெரியும். நானும் பேசுவேன் என திண்டுக்கல் சீனிவாசனிடம் மேடைக்கு முன்பு கூச்சலிட்டார். இதையடுத்து அம்பிகாபதிக்கு ஆதரவாக பல நிர்வாகிகள் தொண்டர்கள் குரல் எழுப்பத் தொடங்கினர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குவாதம் நடந்து கொண்டே இருந்ததால் திண்டுக்கல் சீனிவாசன் உடனே அம்பிகாபதியை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், முடியவில்லை. இதனால், பேசாமல் சென்று அமர முயன்றார். இதை பார்த்த அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் சிலர், அம்பிகாபதியை அழைத்துச் சென்று ஓரமாக அமர வைத்து சமாதானம் செய்தனர். இந்த பரபரப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது.
பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: அ.தி.மு.க.,வில் உள்ளவர்கள் மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். கட்சியினர் மனம்விட்டு பேசினால் தான், நாங்கள் அதற்குரிய நடவடிக்கை (ஆப்ரேசன்) செய்ய முடியும். அ.தி.மு.க., கூட்டணிக்கு வருபவர்களை நான் வரவிடாமல் தடுப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் கடந்த எம்.பி., தேர்தலில் கூட்டணி கட்சியான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ரூ.25 கோடி, கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ரூ.15 கோடி என மொத்தம் 40 கோடி ரூபாயை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதற்குண்டான ஆதாரம் உள்ளது.
உத்தமரான ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 67 உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிடவில்லை. நீதிமன்றம் நல்லத்தீர்ப்பை வழங்கி உள்ளனர். டாஸ்மாகில் மது பாட்டில்களுக்கு பத்து ரூபாயை கூடுதலாக வசூலித்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்று வந்த பிறகு தற்போது 20 ரூபாய் வாங்குகிறார்.
எடப்பாடி பழனிசாமி அரசுத் துறைகளை குறித்து மேடையில் விவாதம் செய்து கொள்வோம் என தமிழக முதல்வரைப் பார்த்து கேட்டார். ஆனால் அவர் பதில் கூறாமல், எலி குட்டியான தனது மகனான, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விட்டுப் பேசவைக்கிறார். எங்களிடமும் ஆயிரம் குட்டிகள் உள்ளன.
தமிழகத்தில், சாராயம், போதை பொருள், கற்பழிப்பு, பள்ளிச் சிறுவர்கள் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தமிழக முதல்வர் கட்டுப்படுத்தவில்லை. அதானி குழுமத்தில் செயற்கை மின்சாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாகி உள்ளது எனத் தகவல் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதானி, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் பார்த்துப் பேசி இருக்கின்றார். அப்படி என்றால், இருவருக்கும் இடையில் நடந்த பேரம் எவ்வளவு. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவிக்கிறார். இதுபோன்றவற்றுக்கு பதில் கூறும் வகையில் வரும் 2026-ம் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விற்குப் பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.