சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 பேர்... குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதை அடுத்து, தினேஷ்குமார் உட்பட மூவரையும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை அதிரடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு தொடர்ந்து 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் இருந்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் பெற்றோர் விசாரித்த போது 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். உடன் இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த பிப்.17-ம் தேதி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தினேஷ்குமார் (32), கண்ணன்(74), சரவணன்(37) ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தினேஷ்குமார் மற்றும் கண்ணன், சரவணன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையின் படி மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதை அடுத்து, தினேஷ்குமார் உட்பட மூவரையும் திருச்சி மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பாலியல் தொல்லைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் கடந்த பிப்ரவரி மாதத்தில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில், வரும் கல்வியாண்டு துவக்கத்தில், ஜுன் மாதத்தில் தொண்டு நிறுவனங்கள், காவல்துறை, சமூக நலத்துறை மூலம், ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வுகளுடன் கூடுதலாக, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கும் வகையில் மாணாக்கருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பாலியல் புகார் தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மீது, 238 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதில் 11 பேர் மீதான வழக்கில், அவர்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட ஒரு 7 பேர் வரை இறந்துவிட்டனர். இது இல்லாமல், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிரான வழக்கு பரிசீலனையில் இருந்து வருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே, யாரும் அச்சப்படத் தேவையில்லை. மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளில் உடனுக்குடன் நீதிமன்றம் வாயிலாக தண்டனையும் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.





















