தஞ்சாவூர் முருகன் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு: பரபரப்பில் பக்தர்கள்! போலீசார் தீவிர விசாரணை
200 ஆண்டுகள் பழமையான பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலி்ல் கத்தரிநத்தத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஸ்குமார் (37) என்பவர் பூஜைகள் செய்து வருகிறார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த முருகன் கோயிலில் மூன்று ஐம்பொன் சிலைகளும், ஒரு வெண்கல கலசமும் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே புன்னைநல்லூரில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து அம்மனை வழிபடுவது சிறப்பாகும். ஆடி மாத வெள்ளிக் கிழமைகள் மிகவும் சிறப்பானவை. புன்னைநல்லூரில் புற்று மண்ணால் உருவான மாரியம்மனுக்கு, மராட்டிய மன்னர்கள் காலத்தில் கோயில் கட்டப்பட்டது. அதிலிருந்து இக்கோயில் அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோயில் அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே 200 ஆண்டுகள் பழமையான பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலி்ல் கத்தரிநத்தத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சதீஸ்குமார் (37) என்பவர் பூஜைகள் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பூஜைகள் முடித்து வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சதீஸ்குமார் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை 8.45 மணிக்கு சதீஸ் குமார் கோயிலை திறந்து உள்ளே சென்றார். கோயிலுக்குள் கிரில் கேட் வைத்து பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றேகால் அடி உயர முருகன் சிலை, தலா ஒரு அடி உயரத்தில் வள்ளி- தெய்வானை சிலைகள் மற்றும் வெண்கல கலசம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3.50 லட்சம் என்று கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் வெல்டிங் மிஷின் மூலம் கிரில் கேட்டை உடைத்து சிலைகளை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து சதீஸ்குமார் தஞ்சாவூர் தாலுகா போலீசிற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கோயில்ககு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் மாரியம்மன் கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





















