தஞ்சாவூர் அருகே அரசு விரைவு பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்
திருக்கானூர்பட்டியில் அரசு விரைவு பேருந்து மோதி டூவீலரில் வந்த முதியவர் உட்பட இரண்டு பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் அரசு விரைவு பேருந்து மோதி டூவீலரில் வந்த முதியவர் உட்பட இரண்டு பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ வீலரில் வந்துக்கொண்டு இருந்தனர். அப்போது, வேளாங்கண்ணியில் இருந்து கொல்லம் செல்லும், அரசு விரைவு பேருந்து தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தது.
அப்போது, தஞ்சாவூர் அருகே திருக்கானுார்பட்டி பகுதியில், முன்னால் சென்ற வாகனத்தை அரசு விரைவு பேருந்து முந்த முயன்றது. அப்போது, எதிரே பழனிவேல் ஓட்டி வந்த டூ வீலர் மீது அரசு விரைவு பேருந்து மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட பழனிவேல் மற்றும் அடையாளம் தெரியாத பெண் இருவரும் சாலையில் விழுந்து படு காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு, அரசு பஸ் டிரைவர் நாகை மாவட்டம் பால் பண்ணை சேரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் திருமாறன் (44) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கானுார்பட்டியில், வல்லம் – தென்னமாநாடு, தஞ்சாவூர் – புதுக்கோட்டை நான்கு சாலை சந்திப்பு இடத்தில் எந்த வித பாதுகாப்பும் இல்லாத சூழலில், இது போன்ற விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே திருக்கானூர்பட்டி நால்ரோடு பகுதியில் சிறிய அளவிலான ரவுண்டானாவை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.