தொடர் மழையால் கடந்த 3 நாட்களில் 189 வீடுகள் இடிந்து சேதம்: தமிழகத்தில் எங்கு தெரியுங்களா?
தொடர் மழைக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 189 கூரை, கான்கிரீட் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் கடந்த 3 நாட்களில் 189 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் கால்நடைகள் உயிரிழந்தால் ரூ.37500-ம் நிவாரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி நிவாரணமாக வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஃபெஞ்சல் புயலால் பரவலாக மழை
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவாக பெஞ்ஜல் புயல் இன்று இரவுக்குள் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில் புயல் எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த 25, 26 ஆகிய 2 நாட்கள் அதி கனமழை கொட்டியது. பின்னர் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தஞ்சை மாநகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் காலை வேளைகளில் மழை பெய்தது. பின்னர் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
2000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கின
தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி தேமடைந்துள்ளன. இதையடுத்து வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தொடர் மழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகள் பகுதி, முழு அளிவில் இடிந்து சேதமடைந்து வருகிறது. கடந்த 27ம் தேதி மழையால் 35 குடிசை வீடுகளும், 26 கான்கிரீட் வீடுகளும் என 61 வீடுகள் பகுதியளவில் இடிந்து சேதமடைந்துள்ளன. மேலும் 4 கால்நடைகள் இறந்தன.
3 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 189 வீடுகள் இடிந்தது
28ம் தேதி 38 கூரைவீடுகள், 34 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 3 கூரைவீடுகள் முழுமையாகவும் என 75 வீடுகள் இடிந்தன. 12 கால்நடைகளும் இறந்துள்ளன. இன்று 33 கூரைவீடுகள், 18 கான்கிரீட் வீடுகள் பகுதியளவிலும், 2 கூரைவீடுகள் முழுமையாகவும் என மொத்தம் 53 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. 2 கால்நடைகள் இறந்துள்ளன.
இந்த நிலையில் தொடர் மழைக்கு கடந்த 3 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 189 கூரை, கான்கிரீட் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. இதில் 5 வீடுகள் முழுமையாக இடிந்து சேதம் அடைந்துள்ளது. 18 கால்நடைகளும் இறந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளுக்கு ரூ.8 ஆயிரம் வீதமும், பகுதியாக சேதமடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.6500 வீதமும், முழுமையாக சேதமடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு ரூ.1.20 லட்சம் வீதமும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் உயிரிழந்தால் ரூ.37500-ம் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. மேலும் உடனடி நிவாரணமாக அரிசி, வேட்டி, சேலையும் வழங்கப்படுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் பனி மட்டும் கொட்டிய நிலையில் தொடர்ந்து பெய்த மழையால் சாகுபடி வயல்களில் களைகள் அதிகம் இருந்தது. இதை விவசாயத் தொழிலாளர்கள் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வேலையின்றி வாடி வந்த விவசாயத் தொழிலாளர்கள் தற்போது களை பறிப்பு பணிகளில் வெகுவாக மும்முரம் அடைந்துள்ளனர்.