Thanjavur: மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா - முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராசராச சோழன் 1038வது சதய விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராசராச சோழன் 1038வது சதய விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது பெரிய கோயில் என்றால் மிகையில்லை. ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு சதயவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. ராஜராஜசோழனின் சதய விழாவை ஒட்டி பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
சதய விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், அதிகாரிகளுடன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிட வசதி குறித்தும் மாமன்னன் இராசராச சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல், நிகழ்ச்சிக்கான படிக்கட்டுகள் அமைத்தல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பொதுமக்கள் விழாவிற்கு வரும்போது தேவையான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத், அறநிலைத்துறை இணை இயக்குநர் ஞானசேகரன், மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவன் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் வரும் 24 ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ. தெய்வநாயகம் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் மு. இராஜேந்திரன், இந்திய தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை ந. செல்வராஜ் ஆகியோர் பேசவுள்ளனர்.
பின்னர், மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவற்றைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம், 8.15 மணிக்கு சிவதாண்டவம், 8.30 மணிக்கு இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சதய விழா நாளான அக்டோபர் 25 ஆம் தேதி காலை 7.20 மணிக்கு மாமன்னன் சிலைக்கு மாலை அணிவித்தல், 8 மணிக்கு திருமுறைத் திருவீதி உலா, காலை 9.10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகிக்கு பேரபிஷேகம், பிற்பகல் 1.40 மணிக்கு பெருந்தீப வழிபாடு, மங்கள இசை, நடன நிகழ்ச்சி, தேவார இன்னிசை, மாலை 4 மணிக்கு நாட்டியாஞ்சலி, நாத சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள நிறைவு விழாவில் முனைவர் அ.தெட்சிணாமூர்த்தி, மருத்துவர் எம். செல்வராஜ், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் வ. பழனியப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு மாமன்னன் இராசராசன் விருது வழங்கப்படவுள்ளது. இதையடுத்து, இரவு 8 மணிக்கு சுகிசிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.