இனம் என பிரிந்தது போதும், இந்துக்கள் கொண்டாடிய மொஹரம் பண்டிகை! மத நல்லிணக்கத்தின் மகத்துவம்!
ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மதம், இனம் கடந்து மொஹரம் பண்டிகை கொண்டாடி வருவதாகவும் அக்கிராமத்தினர் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே காசவளநாடுபுதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் விதமாகவும், சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்துக்கள் இணைந்து மொஹரம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒற்றுமையுடன் வாழ முடியும்
மதநல்லிணக்கம் என்பது வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் மரியாதையுடனும், புரிதலுடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வதும், நல்லுறவைப் பேணுவதும் இதன் முக்கிய அம்சங்களாகும். மதநல்லிணக்கம் என்பது வெறுமனே சகிப்புத்தன்மை மட்டுமல்ல. இது ஒருவரையொருவர் மதித்து, அவர்களின் நம்பிக்கைகளையும் கலாச்சாரங்களையும் புரிந்துகொள்வதாகும். இதன் மூலம், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, சமூகத்தில் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், சமூகத்தை மேம்படுத்தவும் ஒன்றிணைந்து செயல்படுவது சிறந்த மத நல்லிணக்கம் ஆகும். இதன் வாயிலாக சமூகத்தில் அமைதியையும், வளர்ச்சியை ஏற்படுத்த முடியும், மேலும் அனைவரும் சமமாக நடத்தப்படும் ஒரு சமூகத்தை மத நல்லிணக்கம் உருவாக்குகிறது.
வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களைப் பற்றிப் பேசுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இதனால் மக்கள் மத்தியில் சகோதரத்துவம், மனிதாபிமானம் போன்றவை ஏற்படுகிறது. அனைத்து மத விழாக்களும் நம்முடைய விழா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல் நாம் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொள்கிறோம். எனவே நாம் ஒவ்வொருவருக்கும் ஒரு உறுதியான ஆதரவு அமைப்பு தேவை. குடும்பம், சமூகம், மதம் மற்றும் சமூகம் ஆகியவை நம் வாழ்க்கையை வெற்றிகரமாக கட்டியெழுப்ப மத நல்லிணக்கம், சகோதரத்துவம் போன்றவை அசைக்க முடியாத அடித்தளமாக செயல்படுகின்றன.
மொஹரம் பண்டிகை
அந்தவகையில் இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொஹரம் மாதத்தின் பத்தாம் நாளை மொஹரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவர்.
இந்நிலையில், தஞ்சாவூர் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காசவளநாடு புதூர் கிராமத்தில் மத நல்லிணக்கத்தை பறை சாற்றும் விதமாக ஆண்டுதோறும் மொஹரம் பண்டிகையை கிராம விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி மொஹரம் பண்டிகையையொட்டி இக்கிராமத்தில் இந்துக்கள் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற 10 நாட்களுக்கு முன்பே விரதத்தைத் தொடங்கினர். அங்குள்ள மசூதியில், அக்கிராமத்தில் உள்ள தெருக்களிலும், வீடுகளில் அலங்காரம் செய்யப்பட்டன. தெருக்களில் ஒலிபெருக்கிகள் மூலம், முஸ்லிம் இறை நம்பிக்கை பாடல்கள் ஒலிக்கப்பட்டு, கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
தீமிதி திருவிழா
மொஹரம் பண்டிகையான இன்று பஞ்சா எனப்படும் கரகம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குத் தாரை தப்பட்டையுடன் கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கரகத்துக்குத் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை மாலை மற்றும் பட்டு துண்டை சாத்தி வழிபட்டனர். பின்னர், பஞ்சா கரகத்துடன் அங்குள்ள பூக்குழியில் (தீமிதி) இறங்கி வழிபட்டனர். இவர்களுக்கு திருநீறும், எலுமிச்சையும் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும், பெண்கள் புதிய மண் கலயம் அல்லது புதிய பாத்திரத்தில் பானகம், அவல், தேங்காய், பழம் வைத்து படையலிட்டு வழிபட்டு, பின்னர் பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் வழங்கினர்.
இக்கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு குளம் வெட்டப்பட்டபோது உள்ளங்கை உருவத்தில் உலோகம் கிடைத்ததாகவும், அது கடவுளின் கையாகக் கருதி கோயில் அமைத்து வழிபட்டு வருவதாகவும், ஏறத்தாழ 300 ஆண்டுகளாக மதம், இனம் கடந்து மொஹரம் பண்டிகை கொண்டாடி வருவதாகவும் அக்கிராமத்தினர் தெரிவித்தனர்.





















