தஞ்சாவூர்: பாபநாசத்தில் ஆடு, மாடு, நாய்கள் கழுத்தில் பதாகைகளை தொங்கவிட்டு நூதன போராட்டம்
’’கால்நடை மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர்கள் சிலர், வைக்கோல் போரும், குப்பைகளை கொட்டி ஆக்கிரமிப்பு’’
பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் ஊராட்சியில் கால்நடை மருந்தகம் அமைத்திட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனை அமைக்க 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக வருவாய்த்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கால்நடை மருந்தகம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே கால்நடை மருத்துவமனை அமைக்க காலதாமதம் செய்து அலட்சியமாக செயல்படும் கால்நடை துறையினரை கண்டித்து பாபநாசம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கணபதி அக்ரஹாரம் கிராம விவசாயிகள் நாய், ஆடு மற்றும் மாடுகளுடன் வந்து அவற்றின் கழுத்தில் கோரிக்கை பதாகைகளை அணிவித்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி கால்நடை மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் வலுப்படுத்தப்படும் என அதிகாரிகளுக்கு விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர். இப்போராட்டத்திற்கு புனல்வாசல் சமூக ஆர்வலர் சம்மந்தம் தலைமை வகித்தார். கிராமவாசிகள் ராஜ்மோகன், முருகானந்தம், அசோக்குமார், குமரவேல், சண்முகவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது குறித்து கிராமவாசியான முருகானந்தம் கூறுகையில்,
கணபதிஅக்ரஹாரம் பல வருடத்திற்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு கணபதி அக்ரஹாரம், கோவிந்தநாட்டுச்சேரி, மணலுார், பெருமாள் கோயில், இலுப்பக்கோரை, உள்ளிக்கடை உள்ளிட்ட சுற்றுப்பகுதியிலுள்ள கிராமங்களிலிருந்து மாடு, ஆடு, நாய், கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் சிகிச்சைகாக கொண்டு வருவார்கள். இக்கிராமங்களில் மாடு, ஆடு நாய் போன்ற சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கட்டிடம் சிதிலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கின்றது. அதனால் கடந்த ஆட்சியின் போது, கணபதிஅக்ரஹாரம் கிராமத்திலுள்ள புறம்போக்கு இடத்தில், புதியதாக கால்நடை மருத்துவமனை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அதன் பேரில், 40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, இடமும், வருவாய்த்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
இது குறித்து கால்நடை துறையில், புதிய கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கி, இடமும் தேர்வு செய்து கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் கட்டிடம் இதுவரை கட்டுவதற்கு எந்தவிதமான பணிகளும் நடைபெறவில்லையேஎன்று கேட்டதற்கு, வருவாய்த்துறையினர் இடத்தை தேர்வு செய்து கொடுத்து விட்டு சென்று விட்டனர்.தேர்வான இடத்திற்கு சென்றால், அங்குள்ள சிலர் எங்களை மறித்து உள்ளே விட மறுக்கின்றார்கள். அதனால் தான் பணிகள் நடைபெறவில்லை என்று பதில் கூறுகின்றனர். தற்போது, கால்நடை மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தனி நபர்கள் சிலர், வைக்கோல் போரும், குப்பைகளை கொட்டி, ஆக்கிரமித்துள்ளனர்.
பாபநாசம் தாலுக்கா பகுதியிலுள்ள அனைத்து அரசு அதிகாரிகளும், இடத்தை ஆக்கிரமித்து வைத்தள்ள தனிநபர்களுக்கு பயந்து கொண்டு பணிகளை தொடங்காமல், காலம் தாழ்த்துவதற்கு என்ன காரணம் என்று புரியாத புதிராக உள்ளது. எனவே, கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு காலம் தாழ்த்தும் பாபநாசம் வருவாய் துறை , கால்நடை துறை கண்டித்து, பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, மாடு, ஆடு, கோழி, நாய்களின் கழுத்தில் கோரிக்கை அடங்கிய பதாதைகளை தொங்கவிட்டு, கோஷங்களை எழுப்பினோம். எனவே, மாவட்ட நிர்வாகம், உடனடியாக கணபதி அக்ரஹாரம் கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்நடை மருத்துவமனையை கட்டும் பணியை தொடங்காவிட்டால், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றார்.