Grama Sabha Meeting: தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சி கிராம சபா கூட்டம் மணல்மேடு கிராமத்தில் மரத்தடியில் நடந்தது.
![Grama Sabha Meeting: தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் Thanjavur Grama Sabha Meeting Thirumalaisamudram Tanjore District News in Tamil- TNN Grama Sabha Meeting: தஞ்சை அருகே திருமலைசமுத்திரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/722a0df8f59d48c5d8d87100198eb11e1696243126707113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி சார்பில், அடிப்படை வசதிகள், சாலை, கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு பணிகள் குறித்த தீரமானங்கள் விளக்கிக் கூறப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பேசுகையில், தமிழக முதல்வர் கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மக்களை தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சிறப்பு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்களது குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெயர் விடுபட்டவர்கள் இ-சேவை மையங்களில் குடும்ப அட்டையின் 'எண்' குறித்து தெரிவித்தால் விபரங்கள் அறியலாம். குறைகள் இருப்பின் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றார்.
இதில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சங்கர், ஒன்றியக் குழு துணைத் தலைவர் அருளானந்தசாமி, வேளாண் துறை துணை இயக்குனர் பால சரஸ்வதி, உதவி இயக்குனர் அய்யம்பெருமாள், தோட்டக்கலை அலுவலர் வெங்கடாசாமி, வேளாண் பொறியியல் உதவி இயக்குனர் மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், நாராயணன், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் விஜய் ஆனந்த், தஞ்சாவூர் வட்டாட்சியர் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மு.அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாபநாசம் அருகே ராஜகிரி ஊராட்சி கிராம சபா கூட்டம் மணல்மேடு கிராமத்தில் மரத்தடியில் நடந்தது.
ராஜகிரி ஊராட்சி தலைவர் சமீமா பர்வீன் தலைமை வகித்தார். இதில் ஊராட்சி நிதிநிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் சட்ட மக்கள் குறைதீர் திட்டம் போன்றவை குறித்த விவாதங்கள் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டம் மரத்தடியில் நடத்தப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பள்ளி வளாகத்திலோ அல்லது கட்டிடத்தின் உள்ளேயோ கிராம சபை கூட்டத்தை நடத்தி இருக்கலாம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு மக்கள் உட்கார்வதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இப்படி மரத்தடியில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)