ஆன்லைன் முறையில் நெல் கொள்முதல் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு
’’ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை’’
தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கியவுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் விவசாயிகள் அனைவரும் எழுந்து, நெல்லை விற்பனை செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற திட்டத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகள் மட்டுமே லாபம் அடைவார்கள். எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்ய போவதாக தெரிவித்தனர்.
பின்னர் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களிட்டபடி கூட்ட அறையில் இருந்து வெளியே வந்து சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் விவசாயி கண்ணன் பேசுகையில், நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு திட்டம் மத்திய அரசு ஒப்புதலின் பேரில் தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய, ஆதரவு தரக்கூடிய திட்டம் இது. எனவே இந்த திட்டத்தை மத்தியஅரசு ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்தை தமிழகஅரசு நடைமுறைப்படுத்தாமல் கடுமையாக எதிர்க்க வேண்டும். இத்திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் வருகிற 5-ந் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
ராயமுண்டான்பட்டி வெ.ஜீவக்குமார் கூறுகையில் நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் எந்த நியாயமும் இல்லை. இந்த திட்டம் தேவையில்லாதது. சிறு, குறு விவசாயிகள் சிட்டா, அடங்கல் வாங்குவதற்காக அலைய முடியாது. மத்தியக்குழு வந்து பயிர் சேதத்தை ஆய்வு செய்தது. எவ்வளவு நிவாரணம் தரப்படும் என எதிர்பார்த்து இருக்கிறோம். இந்த நேரத்தில் இந்த ஆன்லைன் முன்பதிவு திட்டம் தேவையா? எனவே ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூந்துருத்தி சுகுமாறன் கூறுகையில், ஏற்கனவே நெல்லை விற்க நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரும் விவசாயிகளின் பெயர், முகவரி, எவ்வளவு மூட்டை நெல் போன்ற விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வரும் நேரத்தில் ஆன்லைன் முன்பதிவு முறை தேவையில்லாத ஒன்று. இந்த திட்டத்தை ரத்து செய்யவில்லை என்றால் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.
இதற்கு பதிலளித்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ஆன்லைன் முன்பதிவு திட்டத்தால் விவசாயிகள் நெல்லை கொட்டி வைத்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த திட்டத்தில் தவறு நடக்க வாய்ப்பு இல்லை. விவசாயிகள் பதிவு செய்த தேதியில் நெல்லை விற்றுவிட்டு செல்லலாம். 70 சதவீதம் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்ட பரப்பை விட 2 மடங்கு அளவுக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவற்றை சரி செய்யும் பணி சில கிராமங்களில் நடைபெறுறது. அந்த பணி முடிந்தவுடன் மீதமுள்ளவர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்றனர்.