கண்களில் கருப்பு துணியை கட்டி கைகளில் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இந்த வருடம் விவசாயிகள் குறித்து பதிவேற்றம் செய்வதில் சில குளறுபடிகள் உள்ளது. நிலம் உரிமையாளர்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யும் வகையில் கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்களை கட்டிக் கொண்டு ஈடுபட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்காமல், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு, கண்களில் கருப்பு துணிகளை கட்டி, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி உள்ளனர். இதற்காக தங்களின் வயல்களை உழுது, எரு அடித்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் இந்த வருடம் விவசாயிகள் குறித்து பதிவேற்றம் செய்வதில் சில குளறுபடிகள் உள்ளது. நிலம் உரிமையாளர்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யும் வகையில் கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும் அளவில் குத்தகை விவசாயிகள் உள்ளனர். நில உரிமையாளர்கள் மட்டுமே குறுவை சாகுபடி தொகுப்பை பெற முடியும் என்றால் பெரும் அளவில் குத்தகை சாகுபடி செய்துள்ள மற்றும் சாகுபடி செய்ய இருக்கின்ற விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே குறுவை சாகுபடி அதிக அளவில் குறைந்து, நெல் கொள்முதலும் பாதிக்கும் அபாய நிலையில் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்காமல், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்ப பெற்று அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பாபநாசம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணிகளை கட்டி, பேனர் மற்றும் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் செயலாளர் சுந்தர.விமல்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.
பாரபட்சமில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் வழக்கம் போல் குறுவை தொகுப்பு திட்ட நிதியை வழங்க வேண்டும். காவிரி சமவெளி அல்லாத மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை தமிழக அரசு நீட்டிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள பயனாளிகளை குறைக்க கூடாது. இதை வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















