கும்பகோணத்தில் ஆம்னி பஸ்களுக்கு தனி பஸ் ஸ்டாண்ட் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி காவிரி, அரசலாறு என 2 ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைந்து உள்ளன. மேலும் கும்பகோணத்தை சுற்றிலும் நவகிரக கோவில்கள் புராதன கோவில்கள் இருக்கின்றன. கும்பகோணம் பகுதி கோயில்களுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கும்பகோணத்தில் நடக்கும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழா ஆகும். இவ்வாறு ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள், பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர்.
பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் மாநகராட்சியின் நடுவே புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களில் மற்ற நாட்களில் குறைவாக பயணிகள் சென்று வந்தாலும், விழா மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகள் வரத்து அதிகம் இருக்கும். இதனால் அனைத்து பஸ்களும் நிரம்பிதான் செல்லும்.
கும்பகோணத்தில் இருந்து மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் அரசு பஸ்களுக்கு உள்ளது போல் தனியார் பஸ்களுக்கு தனியாக பஸ் ஸ்டாண்ட் இல்லை. இதனால் தனியார் பஸ்கள் அனைத்தும், கும்பகோணம் புதிய பஸ் ஸ்டாண்டின் அருகே சாலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதிகள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கிறது. குறிப்பாக பஸ்கள் வெளியே வரும் பாதையில், தனியார் பஸ்கள் நிற்பதால் பஸ்கள் வெளியே வர முடியாமல் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கும்பகோணத்தில் இருந்து பெரும்பாலும் டவுன் பஸ்கள் காலை முதல் இரவு குறிப்பிட்ட நேரங்கள் வரை மட்டும் இயக்கப்படுகின்றன. பஸ்கள் இயக்கப்படும் போது மட்டும் டவுன் பஸ் நிற்கும் பஸ் ஸ்டாண்ட் கூட்டமாக காணப்படுகிறது.
இரவு நேரங்களில் இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படாததால் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் மாநகர பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ்களை அனுமதிக்கலாம். இதற்காக குறைந்த பட்சம் கட்டணம் வசூலித்தால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். போக்குவரத்து நெரிசலும் முற்றிலும் குறையும். ஒரே இடத்தில் அனைத்து பஸ்களும் நின்றால் தேடி அலையும் நிலை ஏற்படாது என்றனர்.
இதுகுறித்து தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்கள் தரப்பில் கூறுகையில், கும்பகோணம் மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது. இங்கிருந்து ஒரு நாளைக்கு ஏசி மற்றும் ஏசி அல்லாத பஸ்கள் என்று சுமார் 15 முதல் 20 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு என தனியாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் ஆம்னி பஸ்களுக்கு என்று தனி இடம் இல்லை. இதனால் சாலையிலேயே பஸ்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. சென்னை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆம்னி பஸ்களுக்கு தனியாக பஸ் ஸ்டாண்ட் உள்ளது போல் கும்பகோணத்திலும் அமைக்கவேண்டும். என்றனர்.