Thanjavur: புதுக்குடியில் ஆவின் நிர்வாகம் கட்டும் தடுப்புச்சுவரை அகற்ற கோரி திரண்ட பொதுமக்கள்
ஆவின் நிறுவனத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெரிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை எடுப்பதால் எங்களது கிராமத்தில் தண்ணீரின் சுத்தம் கெட்டு போய் உப்பு நீராக வருகிறது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் ஆவின் நிர்வாகம் கட்டும் தடுப்பு சுவரை அகற்ற கோரி பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையால் மக்கள் கலைந்து சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் புதுக்குடி கிராமத்தில் அப்பகுதி மக்கள் ஆண்டாண்டாக நீர்நிலை புறம்போக்கை வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆவின் நிறுவனம் தடுப்பு சுவர் அமைக்க இருப்பதை அறிந்த பகுதி மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் செந்தில் சிலம்பரசன் தலைமையிலும், தஞ்சை மைய மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன், வல்லம் அந்தோணி திருவையாறு தொகுதி துணைச் செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலையிலும் ஒன்று திரண்டு பணியை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
இதனை அறிந்த பூதலூர் வட்டாட்சியர் பெரிஸ்டா, திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ், பூதலூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் , செங்கிப்பட்டி உதவி ஆய்வாளர் பாரதி , புதுக்குடி கிராம அலுவலர் பாலமுரளி, வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்கள் எங்களது தெருவில் மாதா கோவில் பின்புறம் உள்ள 30 ஏக்கர் இடத்தை கால்நடைகள் மேய்வதற்கு ஒதுக்கப்பட வேண்டும். நாங்கள் ஆண்டாண்டாக விவசாயம் செய்த நீர்வழி பாதையை அடைக்கக் கூடாது.
அதேபோல ஆவின் நிர்வாகம் அரசு ஒதுக்கீடு செய்த 120 ஏக்கர் இடத்தைத் தவிர வேறு பல ஏக்கர் நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை மறு அளவீடு செய்ய வேண்டும்.
ஆவின் நிறுவனத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெரிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை எடுப்பதால் எங்களது கிராமத்தில் நீர் சுத்தமாக மாசுவாகி உப்பு நீராக வருகிறது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட வட்டாட்சியர் கூடிய விரைவில் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு பரிந்துரை செய்கிறேன் என்று கூறினார் . பின்பு அமைதிப் பேச்சு வார்த்தை முடியும் வரை ஆவின் நிறுவனம் சுற்றுச்சுவர் அமைப்பதை நிறுத்தி வைக்க சொல்கிறேன் என்றும் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் யோகராஜ் பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ஆவின் நிர்வாகம் அரசு ஒதுக்கீடு செய்த 120 ஏக்கர் இடத்தைத் தவிர மேலும் பல ஏக்கர் நீர்நிலை புறம்போக்குகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே இதை மறு அளவீடு செய்ய வேண்டும்.
ஆவின் நிறுவனத்தினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பெரிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீரை எடுப்பதால் எங்களது கிராமத்தில் தண்ணீரின் சுத்தம் கெட்டு போய் உப்பு நீராக வருகிறது. இதனால் வரும் காலங்களில் குடிநீருக்கு பெரும் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறுகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர்.