‘தங்கள் குழந்தைகளுக்கு கல்வி மிக முக்கியம்’ - கிராம சபை கூட்டத்தில் தஞ்சை கலெக்டர் பேச்சு
குளிச்சப்பட்டு ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் திருக்கருகாவூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கலந்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் திருக்கருகாவூர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஊராட்சியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பேசியதாவது:
பொதுமக்கள் அனைவரும் ஊராட்சியில் நடைபெறுகிற வளர்ச்சிப் பணிகள் பற்றிய விபரங்களை அறிந்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக குடிநீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு கல்வி மிக முக்கியமானதாகும். பள்ளிக் குழந்தைகள் மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது.
உயர்கல்வி பெறுகிற பெண்களின் உயர்வுக்காக புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் சிறப்பான திட்டமாகும். நான் முதல்வன் திட்டம் மூலமாக திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடத்துகிற வேலைவாய்ப்பு முகாம்களை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் சங்கர். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன். ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர் பூரணிமா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஈஸ்வர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது அமானுல்லா, கூத்தரசன், ஊராட்சித் தலைவர் கோண்டு (எ) கோவிந்தராஜ், அம்மாபேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குளிச்சப்பட்டு ஊராட்சியில் ஊராட்சித் தலைவர் இளவரசி கலியமூர்த்தி தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி தஞ்சாவூர் ஒன்றியம் குளிச்சப்பட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் மாரியம்மாள், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் உதயசூரியா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வனிதா நடராஜன், கவுன்சிலர் கவிதா குமரேசன், ஊராட்சி செயலாளர்கள் சசிகுமார், மக்கள் நல பணியாளர் மாலா, உறுப்பினர்கள் உமாராணி அரங்க குரு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மாரியம்மன் கோவில் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், துணைத் தலைவர் சாகுல் ஹமீது, தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், கவுன்சிலர் கவிதா குமரேசன், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதேபோல் விளார் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி சோம ரத்தினசுந்தரம், துணைத் தலைவர் சுந்தரம் வட்டார அலுவலர் பற்றாளர் கோமதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, அங்கன்வாடி ஆசிரியர் மகாலட்சுமி, கவுன்சிலர் பிரேமா சரவணன், செயலாளர் ரவிச்சந்திரன் வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.