பாலியல் தொந்தரவு செய்தவர்களுக்கு சிறை: தண்டனையை இன்னும் கடுமையாக்குமா அரசு?
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்த இளைஞரை வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் அருகே மருங்குளம் புதுப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தோப்பில் 17 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் திருமேனி (38), தோப்பில் சிறுமி தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதை கண்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்தார்.
இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி அலறியபடியே அப்பகுதியில் இருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருமேனியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெண்ணின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், பூதலூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து குணமங்கலத்தை சேர்ந்த வினோத்குமார்(32) என்பவரை, கடந்த நவ.1-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்நிலையில் குற்றவாளியான வினோத்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டி திருவையாறு டிஎஸ்பி அருள்மொழிஅரசு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் ஆகியோர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதை அடுத்து, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வினோத்குமாரை போலீசார் சிறையில் அடைத்தனர்.