விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்: விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! தவறவிடாதீர்!
சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடங்களில் வெற்றிப்பெற்றிருத்தல் வேண்டும். சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.

தஞ்சாவூர்: நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தினை சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதிய உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தஞசாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் வரவேற்கப்படுகிறது.
இதற்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது நலிந்த நிலையில் (வருமானம் குறைந்து, வேலை இல்லாத நிலை போன்றவை) இருப்பது. அரசு, தனியார் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடங்களில் வெற்றிப்பெற்றிருத்தல் வேண்டும். சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும்.
மத்திய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிப்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச , தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை தகுதியான போட்டிகள் ஆகும்.
2025ம் வருடம் ஏப்ரல் மாதம் (30.04.2025) அன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025 ஆம் ஆண்டு பெற்றிருக்க வேண்டும்), வருமானச் சான்று (2025 ஆம் ஆண்டு பெற்றிருக்க வேண்டும்), ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில் / விளையாட்டு சார்ந்தது, விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை இணைத்து, விண்ணப்பதாரர் சார்ந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் 31.07.2025 க்குள் சர்ப்பித்திட வேண்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் https://www.sdat.tn.gov.in விண்ணப்பப் படிவம் கிடைக்கும் மற்றும் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் 24.06.2025 முதல் 3107.2025 வரை மாவட்ட விளையாட்டு அலுவலகம் அன்னை சத்யா விளையாட்டரங்கில் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன் இணைத்து 31.07.2025 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும்.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் விவரத்தினை செய்திக் குறிப்பாக வெளியிட அனுமதி வேண்டி கோப்பு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு அன்னை சத்யா விளையாட்டரங்கம் அலுவலக தொலைபேசி எண்.04362-235633 என்ற எண்ணிலும் மற்றும் 7401703496 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















