மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்... மானியத்துடன் கூடிய கடனுதவி: பயன்பெற கலெக்டர் அழைப்பு
இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம்வரை 25 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட உதவிகளும் வழங்கப்படும்.

தஞ்சாவூர்: பெண்களை தொழில் முனைவோர் ஆக்க தமிழக அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடனுதவியை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டின் பொருளார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ரூ.10.00 இலட்சம்வரை 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.2 இலட்சம் வரை) மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியும், வழங்குவதோடு, தொழில் வளர்ச்சிக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சந்தைபடுத்துதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள். குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 55 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் மக்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் (தவுடு, வைக்கோல்) இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னைநார் மூலம் தயரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடைவடிவமைப்பு.
அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஒவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டுநூல் அணிகலன் தயாரிப்பு குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் தயார் செய்யும் உணவு பொருட்கள், யோகா நிலையம், வளர்ப்புபிராணி பராமரிப்பு நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், மணப்பெண் அலங்கார நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்துமாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்துமாவு சார்ந்த பேக்கரி உணவுபொருட்கள் தயாரிப்பு.
தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரிம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டிவேர் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தில் தொழில் துவங்க ஆர்வமுள்ள பெண்கள் உரிய ஆவணங்களான புகைப்படம், குடும்பஅட்டை, ஆதார்அட்டை, ஜாதிசான்றிதழ், விலைப்புள்ளி பட்டியலுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு (8695426355) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




















