வண்ணாரப்பேட்டை முதலைமுத்துவாரியில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட தஞ்சை கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 251 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணி நிறைவடைந்துள்ளது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் அருகே வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆயிரத்து 68 கி.மீ. தொலைவுக்கு வடிகால், ஏ மற்றும் பி பிரிவு வாய்க்கால்கள் தூர் வாரப்படுகின்றன. இப்பணிகள் 189 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அனைத்து நீர் வளத் துறைக் கோட்டங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு பணிக்கும் வாட்ஸ்ஆப் குழு அமைக்கப்பட்டு, அதில் அந்தந்த பகுதி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் விவசாயிகள் அறிந்து கொள்ளும் விதமாக வாட்ஸ் ஆப் குழுவில் பதிவிடப்படுகிறது.
தற்போது, 251 கி.மீ. தொலைவுக்கு தூர் வாரும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. அதாவது, கிட்டத்தட்ட 25 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மே மாத முதல் வாரத்தில் பெய்த மழையால், தூர் வாரும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது மழை இல்லாததால், முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளில் 124 ஜே.சி.பி. போன்ற கனரக வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்பணிகள் விரைவாக நடைபெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதே நிலைமையில் தட்பவெப்ப நிலை நீடித்தால், ஏ பிரிவு வாய்க்கால்களில் மே 31 ஆம் தேதிக்குள் தூர் வாரும் பணி முடிக்கப்பட்டுவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், அன்னப்பன்பேட்டை அருகேயுள்ள வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட தூர் வாரும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார்.
அப்போது, நீர் வளத் துறைக் கோட்டச் செயற் பொறியாளர்கள் இளங்கோ (காவிரி), மதன சுதாகர் (வெண்ணாறு), பவளக்கண்ணன் (கல்லணைக் கால்வாய்), உதவிச் செயற் பொறியாளர்கள் சிவக்குமார், மலர்விழி, சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேய்வாரி வாய்க்கால் குப்பைகள் கொட்டப்படுவதால் தூர்ந்து போய் காணப்படுகிறது. இந்த கோடைக்காலத்திலேயே பேய்வாரி வாய்க்காலை குருவாடிப்பட்டி தலைப்பில் இருந்து வண்ணாரப்பேட்டை, ராமநாதபுரம் வழியாக முழுமையாக தூர்வாரி கரைகளை பலப்படுத்தினால் விவசாயிகள் சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி வர ஏதுவாக இருக்கும்.
இல்லாவிடில் மழை பொழிவு அதிகம் இருந்தால் வாய்க்காலில் தண்ணீர் ஓட முடியாமல் வயல்களில் தேங்கி சேதத்தை ஏற்படுத்தி விடும். எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை மேற்கொண்டு இந்த பேய்வாரி வாய்க்காலை முழுமையாக தூர் வாரி தண்ணீர் தடையின்றி ஓட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த செய்தியை ஏ.பி.பி. நாடு வெளியிட்டது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை முதலைமுத்து வாரியில் (பேய்வாரி) தூர்வாரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டுள்ளார். இதனால் இந்த வாரி முழுமையாக தூர்வார செய்தி வெளியிட்ட ஏபிபிநாடு செய்திதளத்திற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.