பெரியகோயிலை 'தட்சிணமேரு' என மாமன்னன் ராஜராஜ சோழன் அழைக்க என்ன காரணம்?
Thanjavur Big Temple: மொத்தம் கோயில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் என அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிய செய்துள்ளார் ராஜராஜ சோழன்.
தஞ்சாவூர்: பெரியகோயிலை மாமன்னன் ராஜராஜ சோழன் தட்சிண மேரு என்று என்று அழைத்ததாக கூறப்படுகிறது. அவர் எதற்காக அப்படி அழைத்தார் என்று தெரியுங்களா? தெரிந்து கொள்வோமா?
ஏராளமான அதிசயங்களை உள்ளடக்கியது
அதிசயங்களே அசந்து போகும் அளவிற்கு திரும்பும் இடமெல்லாம் வியக்க வைக்கும், உலகமே அண்ணாந்து பார்க்கும் பெரியகோயில் தன்னுள் ஏராளமான அதிசயங்களை அடங்கி உள்ளது என்றால் மிகையில்லை. ஒவ்வொரு சதுர அடியிலும் நம் முன்னோர்களின் சிறந்த உழைப்பையும், நுணுக்கமான வேலைப்பாடுகளையும், கட்டிடக்கலையில் காட்டிய திறமையும் வெளிப்படும்.
பெரிய கோயிலை தட்சிண மேரு என்று அழைத்தார்
இன்றும் உலகம் ராஜராஜனை போற்றுகிறது. பெரிய கோயிலை ராஜராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தார். அதற்கு காரணம் என்ன தெரியுங்களா? வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும், புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அதுபோல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது பெரிய கோவில். அதனால்தான் ராஜராஜன் தட்சிண மேரு என்று அழைத்ததாக கூறப்படுகிறது.
உறுதுணையாக நின்ற மூவர்
பெருமைமிகு, அனைவரும் வியந்து போற்றும் பெரியகோயிலை கட்டுவதற்கு ராஜராஜ சோழனுக்கு மிக்க உறுதுணையாக நின்றவர்கள் யார் என்று தெரியுங்களா. ராஜராஜ சோழனின் சகோதரி குந்தவை, குரு – கருவூர் சித்தர், படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்.
கல்வெட்டில் பொறித்த ராஜராஜசோழன்
அதெல்லாம் சரிதான் இத்தனை நுணுக்கமான அற்புதமான கோயிலின் கட்டிட நுட்பத்திற்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே. அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் பெயரையும் தவறாமல் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளார் ராஜராஜ சோழன். அந்த கட்டிட நிபுணர்கள் குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்தான்.
முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆன கோயில்
பெரிய கோயிலில் உள்ள மற்ற சில அதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை. பிற்காலத்தில் நாயக்கர், மராட்டிய மன்னர்கள் ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்க்கது.
இசைக்கலைஞர்கள் பெயரும் கல்வெட்டில் இருக்கு
ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. கல்வெட்டுகளில் 400 ஆடல் அழகிகளின் பெயர்களும், அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் உள்ளன. ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோயிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சீரும் சிறப்புடனும் நடந்த மாமன்னரின் நிர்வாகம்
மொத்தம் கோயில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் என அனைத்தையும் கல்வெட்டுகளில் பதிய செய்துள்ளார் ராஜராஜ சோழன். இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்து வைத்த அவரது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கல்வெட்டுகளில் உள்ள சில ஆடல் அழகிகளின் பெயர்கள் பற்றி பார்ப்போம். சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, இரவிகுல மாணிக்கம், மாதேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி, அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி என்று பெயர்கள் கல்வெட்டுகளில் உள்ளன.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம் தானே. இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் சோழ மன்னர்கள் பின் தங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.