தஞ்சை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது சம்பவங்கள்... மக்கள் அதிர்ச்சி
ஒரத்தநாட்டில் நேற்று முன்தினம் ஆங்கில வைத்தியம் பார்த்த, ஹோமியோபதி டாக்டர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாவட்டம் முழுவதும் அரசு உத்தரவின் பேரில் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை அருகே வல்லத்தில் முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் திலகம் உத்தரவின் பேரில் வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன், டாக்டர் மோகன்ராஜ், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சுகாதார அலுவலர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வல்லம் கொட்டாரம் தெரு பகுதியில் நேற்று திடீர் சோதனை மேற் கொண்டனர் .
அப்போது அப்பகுதியில் ஆர்ஐஎம்பி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு போலி டாக்டர்களை கண்டுபிடித்தனர். முறையே அவர்கள் வல்லம் மின்நகரை சேர்ந்த ராமானுஜம் (70) மற்றும் கொட்டாரத் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (53) என தெரிய வந்தது.
இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜம், ஜெயக்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் ஒரத்தநாட்டில் நேற்று முன்தினம் ஆங்கில வைத்தியம் பார்த்த, ஹோமியோபதி டாக்டர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதுார் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் செல்வராஜ் (64). இவர் ஒரத்தநாட்டில் கார்த்திகா மெடிக்கல் வைத்துள்ளார். இதே போல், பனையக்கோட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் முகுந்தன் (61) வேலாயுதம் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இருவரும் ஹோமியோபதி படித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் திலகவதிக்கு புகார் சென்றது. அவர் உத்தரவின் பேரில், ஒரத்தநாடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் செல்வராஜ், முகுந்தன் இருவரின் சான்றிதழை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் இருவரும் ஹோமியோபதி மட்டுமே படித்து விட்டு ஆங்கில வைத்தியம் பார்த்தாக, செல்வராஜ், முகுந்தன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், உடல் பாதிப்புக்காக டாக்டர்களை தேடி செல்லும் மக்கள் அவர் எம்.பி.பி.எஸ்., படித்துள்ளாரா அல்லது படிக்கவில்லையா என்பது எப்படி தெரியும். நம்பிக்கையின் பெயரில் தான் மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். அதிலும் இவ்வாறு போலிடாக்டர்கள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை அரசு இன்னும் இறுக்கி பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.