இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றவர்... தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 103 வயது முன்னாள் ராணுவ வீரர்
நாட்டிற்காக ராணுவத்தில் உழைத்தவரின் மகள்கள் என்பதில் எனக்கும், எனது சகோதரிகளுக்கும் மிகவும் பெருமைதான்.
தஞ்சாவூர்: வயசுக்குதான் வயதாகிறது... 2ம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவ வீரர் (நாயக்) 103 வயதிலும் தன் வேலைகளை தானே செய்து கொள்கிறார். அவர் வசிப்பது தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில்தான். இவரை தஞ்சை மாவட்ட கலெக்டர் பார்த்து ஆச்சரியப்பட்ட நிகழ்வும் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்டத்தை சேர்ந்த 150 பேர் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதில் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (103), அவரது மனைவி நீலாவதி (94), மூத்த மகள் தையநாயகி (75) அவரது கணவர் ராஜகுமாரன் (76) ஆகியோரும் பங்கேற்றனர்.
விழா நடந்த இடத்திற்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வந்தார். உடன் அவர் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது மனைவியை நோக்கி சென்று நலம் விசாரித்தார். பின்னர் என்னை தெரிகிறதா என்று கலெக்டர் கேள்வி எழுப்ப அதற்கு சுந்தரமூர்த்தி தெரியவில்லை என்றார். தொடர்ந்து கலெக்டர் உங்களின் ராணுவ நினைவுகளை சொல்லுங்கள் என்று கேட்டார். அதற்கு சுந்தரமூர்தி எனக்கு நினைவுகள் குறைவாக உள்ளது. அதனால் நான் ஏதாவது தெரிவித்து அது தவறாக போய்விடக்கூடாது என்றார்.
பின்னர் கலெக்டர் கண் ஆபரேஷன் செய்து கொள்கிறீர்களா என்று கேட்டு சுந்தரமூர்த்தியின் மனைவி நீலாவதியிடம் நலம் விசாரித்தார். ஆனால் அவருக்கு கேட்கும் திறன் குறைந்து விட்டது என்பதால் உடன் அவர்களின் வீட்டிற்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து காது கேட்கும் கருவி பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
103 வயதான நிலையிலும் வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு தானே நடந்து வந்தார் சுந்தரமூர்த்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. தன் மாமனார் பற்றி மூத்த மகள் தையநாயகி தெரிவித்ததாவது:
எனது தந்தை இரண்டாம் உலகப் போரின் போது 1942-47ல் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். நாங்கள் 4 பேர் சகோதரிகள். நான் மூத்த மகள். இரண்டாவது பானுமதி (68) இறந்துவிட்டார். அடுத்தவர் வளர்மதி (65), விஜயலட்சுமி (60). பாபநாசத்தில்தான் வசித்து வருகிறோம். நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். எனது அப்பாவிடம் கலெக்டர் நலம் விசாரித்து ராணுவத்தில் இருந்த அனுபவங்கள் குறித்து கேட்டார்.
ஆனால் எனது அப்பாவிற்கு அப்போது நினைவுத்திறன் குறைந்துவிட்டதால் அவரால் கூற இயலவில்லை. பின்னர் எனது அம்மாவிற்கு வீட்டிற்கு வந்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு காதுகேட்கும் கருவி பொருத்த ஏற்பாடு செய்துள்ளார்கள். எனது அப்பா இந்த வயதிலும் தானே நடந்து செல்கிறார். அவரது தேவைகளை அவரே செய்து கொள்கிறார். நாட்டிற்காக ராணுவத்தில் உழைத்தவரின் மகள்கள் என்பதில் எனக்கும், எனது சகோதரிகளுக்கும் மிகவும் பெருமைதான்.. எனது கடைசி சகோதரிக்கு சிறுதொழில் செய்ய அரசு உதவிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இப்போது அவர்தான் எனது அப்பா, அம்மாவை பார்த்துக் கொள்கிறார். அவருக்கு வேறு வருமானம் ஏதும் இல்லை. குடும்பச்சூழல் காரணமாக திருமணம் செய்து வைக்க முடியவில்லை. அவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.