இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது மனிதாபிமானம்... கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் கிடந்த முதியவரை மீட்ட செங்கிப்பட்டி போலீசார்
போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர்: மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது என்பதற்கு உதாரணமாக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பாலத்தின் அடியில் கோழிக்கழிவுகளுக்கு மத்தியில் மிகவும் மோசமான நிலையில் கிடந்த முதியவரை போலீசார் மீட்ட சம்பவம் உணர்த்தியுள்ளது.
மனிதாபிமானம் மரித்து போகவில்லை என்பதற்கு உதாரணமாகவும், போலீசார் மக்களின் நண்பர்கள் என்பதை உணர்த்தும் விதமாகவும் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் மோசமான நிலையில் கோழிக்கழிவுகள் மற்றும் குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த 70 வயது முதியவரை போலீசார் மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலம் ஒன்று உள்ளது. அதன் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதரவாக கிடந்துள்ளார். இதை அவ்வழியே சென்றவர்கள் பார்த்தார்களோ, பார்க்கவில்லையோ தெரியவில்லை.
அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த செங்கிப்பட்டி ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் பார்வையில் அந்த முதியவர் தென்பட்டுள்ளார். அவ்வளவுதான் அதிர்ச்சிக்குள்ளான போலீசார் மூவரும் எதைப்பற்றியும் யோசிக்காமல் சட்டென்று அந்த கழிவுகள் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து கோழிக்கழிவுகளில் இருந்து அந்த முதியவரை மீட்டனர். அவர் யார்? எந்த ஊர் என்று எதுவும் தெரியவில்லை. இருப்பினும் அவரை அப்படியே விட்டுச்செல்லாமல் செங்கிப்பட்டி ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் மூவரும் அந்த முதியவரை குளிப்பாட்டி உள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த பழைய ஆடை நீக்கிவிட்டு வேறு ஆடை அணிவித்தனர். மேலும் அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகளை அளித்தனர். பசி மயக்கத்தில் அந்த முதியவர் இருப்பதை உணர்ந்து உடனடியாக அவருக்கு உணவுகள் வாங்கி வந்து வழங்கி உள்ளனர்.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகுந்த வீச்சம் அடித்த கோழிக்கழிவு குப்பைகளுக்கு மத்தியில் கிடந்த அந்த முதியவரை உடனடியாக மீட்ட செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது. மனிதாபிமானம் இன்னும் செத்துப் போகவில்லை. இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கையில், “முதியவரின் நிலையை அறிந்து உடனடியாக தாங்களே களத்தில் இறங்கி அந்த குப்பைகளை ஒதுக்கி அந்த முதியவரை மீட்டு குளிக்க செய்த போலீசாருக்கு ராயல் சல்யூட்தான் வைக்க வேண்டும். மேலும் அந்த முதியவருக்கு உணவு வாங்கி தந்து மருத்துவமனையில் சேர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்த செங்கிப்பட்டி போலீசார் மனிதாபிமானத்தில் உயர்ந்து நின்று விட்டனர். அவர்களின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. பெற்றவர்களை அனாதரவாக விட்டு செல்லும் வாரிசுகள் மத்தியில் யார் என்றே தெரியாமல் இருந்தாலும் சக மனிதனாக இருந்து முதியவரை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதும், நன்றி கூறுவதும் நமது கடமையாகும்” என்றனர்.