கேண்டீன் திறக்கமாட்டீர்களா..? குடிபோதையில் மருத்துவமனையில் இளைஞர் ரகளை
கேண்டீன் திறக்கமாட்டீர்களா? எனக்கேட்டு அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்களிடம் தகராறு செய்து பொருட்களை அடித்து உடைத்ததோடு, கண்ணாடியையும் உடைத்துள்ளனர்.

தஞ்சாவூர்: குடிபோதையில் தனியார் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
தஞ்சையில் குடிபோதையில் தனியார் மருத்துவமனையில் கேண்டீன் திறக்கமாட்டீர்களா? எனக்கூறி ரகளையில் ஈடுபட்ட வாலிபர் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் நம்பர்-1 வல்லம் சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சம்பவத்தன்று இரவு கேண்டீன் மூடப்பட்டு விட்டது. அப்போது அங்கு 4 வாலிபர்கள் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் ஏன் கேண்டீன் திறக்கமாட்டீர்களா? எனக்கேட்டு அங்கிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களிடம் தகராறு செய்த அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்ததோடு, கண்ணாடியையும் உடைத்துள்ளனர்
இதுகுறித்து மருத்துவமனை ஊழியரான குளிச்சப்பட்டை சேர்ந்த அஸ்வின்குமார் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் மருத்துவமனையில் இருந்த மற்ற ஊழியர்களும் அங்கு ஓடி வந்து தகராறு செய்த ஊழியர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது 3 பேர் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரை மருத்துவக்கல்லூரி போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அண்ணாநகரை சேர்ந்த காமராஜ் மகன் பிரவீன்குமார் ( 22) என்பது தெரிய வந்தது.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் மருத்துவ பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

