தஞ்சை: ஆதரவற்ற தாயின் மகனின் இறுதி காரியத்தை சுடுகாடு வரை சென்று நடத்திய பாக்கியலெட்சுமி
’’மகன் பிரிவை தாங்க முடியாமல் சந்திரா தவித்த தவிப்பை ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. அதுவே என்னை சுடுகாடு வரை செல்ல வைத்தது’’
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியலெட்சுமி. இவரது கணவர் திருநீலகண்டன் 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். பாக்கியலெட்சுமி 6 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சாம்பவியுடன் வசித்து வருகிறார். தென்னை விவசாயம் செய்து இவருக்கு, கஜா புயலில் கிடைத்த நிவாரண பணத்தில் பேராவூரணி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு வாலி பால் மைதானம் அமைத்து கொடுத்துள்ளார். தந்தையின் நினைவு நாளுக்காக தன் மகள் சாம்பவி சேமித்த பண த்தை கொரோனா நிவாரண நிதிக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். மேலும், பேராவூரணி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள் என சுமார் 100 ஆதரவற்றவர்கள் சாலையோரத்தில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அன்பில் நாம் அறக்கட்டளை, அன்னம் பகிர்ந்திடு என்ற பெயரில் ஆதரவற்றவர்களின் உணவு வழங்கி வருகின்றார்.
இந்நிலையில் பேராவூரணி பேருந்து நிலையத்தில் சந்திரா (65) இவருக்கு மனநிலை சரியில்லாத மகன் முத்துகிருஷ்ணன் (47). மகனுக்கு வந்த மாற்றுத் திறனாளி உதவித்தொகை, தனக்கு கிடைத்த முதியோர் உதவித்தொகை ஆகியவை உடல்நிலை பாதிக்கப்பட்ட முத்து கிருஷ்ணனின் சிகிச்சைக்கு செலவாகிவிட பேருந்து நிலையத்திற்கு வந்து கொடுக்கப்படும் உணவை வாங்கி தன் மகனுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், காலை முத்துகிருஷ்ணன் திடீரென உடலமின்றி, இறந்து விட்டார். மனநிலை சரியில்லாமல் இருந்தாலும், ஆதரவாக இருந்த மகனும் தனியாக தவிக்க விட்டுட்டு போயி விட்டானே, என்று மகனின் உடல் முன்பு கதறினார். இதனை பார்த்தவர்களின் கண்களில் கண்ணீர் கசிந்தது. இதனை அறிந்து பொது மக்கள் சிலர் சந்திராவிடம் பணம் கொடுக்க என் மகனே போயிட்டான் பணத்தை வச்சு என்ன பண்ண போறேன், காசு வேணாம் பணமும் வேண்டாம், என் மகனுக்கு இறுதி காரியத்தை மட்டும் செய்தால், அவனது ஆத்மா சாந்தியடையும் என கண்ணீர் விட்டு கதறினார்.
இதை அடுத்து முத்துகிருஷ்ணன் உடல் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. மகன் மார்ச்சுவரியில் கிடப்பதை பார்த்த சந்திரா, ஆறுதல் கூற உறவினர்கள், நண்பர்கள் இல்லாமல், தனிமையில் கதறி அழுதார். இதனால் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோகமயமானது. சந்திராவின் சோகத்தை அறிந்த பாக்கியலெட்சுமி மருத்துவமனைக்கு வந்து சந்திராவிற்கு துணையாக ஆறுதல் கூறினார். அப்போது, பாக்கியலெட்சுமி கையை பற்றி கொண்ட சந்திரா, எனக்கு என்று உறவினர்கள், நண்பர்கள், உதவி செய்யகூட யாரும் இல்லை, என் மகனின் இறுதி சடங்கு முடியும் வரை என்கூட நிற்க முடியுமா என்று சந்திரா கேட்டார். இதனால் மனமுடைந்த பாக்கியலெட்சுமி, உங்களது மகனின் இறுதி காரியம் முடியும் வரை நிற்கின்றேன் என்று உறுதியளித்தார். தொடர்ந்து திருக்குறள் பேரவையின் உறுப்பினரான செந்தில்குமார், அவர்களுக்கு துணையாக நின்றார்.
இந்த தகவலறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், முத்துகிருஷ்ணனின் இறுதி சடங்கிற்கான செலவை ஏற்று கொண்டார். சந்திரா மகன் முத்துகிருஷ்ணனின் உடல், சுடுகாட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. பாக்கியலெட்சுமியும், சந்திராவுக்கு ஆதரவாக, சுடுகாட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் பெண்கள் எல்லாம், சுடுகாட்டுக்கு போக கூடாதுனு தடுத்துள்ளனர். ஆதரவு இல்லாத சந்திரா, சுடுகாட்டிற்கு சென்று தனியாக இருந்து அழுவார்கள். அவருக்கு ஆறுதல் கூற யாரும் இல்லை, எனவே, நான் சுடுகாட்டிற்கு செல்கிறேன் என பாக்கியலெட்சுமி சென்றார். சுடுகாட்டில் முத்துகிருஷ்ணனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது, என் மகன் இறந்து விட்டான், இனி நான் இருந்து என்ன பண்ணப் போறேன் என் மகனோடு சேர்த்து என்னையும் புதைச்சுடுங்கனு சந்திரா கதறி அழுதார். இதனால் மனவேதனையடைந்த பாக்கியலெட்சுமி, நான் உங்களது மகளாக இருந்து நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இந்நிலையில், பாக்கியலெட்மிக்கு, யாரென்று தெரியாத, ஆதரவற்றவரின் இறந்த நிகழ்ச்சியில், ஒரு நாள் முழுக்க இருந்து, சுடுகாடு வரை சென்று உடலை அடக்கம் செய்வது, ரூ. 4 ஆயிரம் வரை செலவு செய்து, சந்திராவிற்கு, புதிய உடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து, தற்காலிகமாக தங்குவதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுத்திருக்கிறார். பாக்கியலெட்சுமியின் செயலை அறிந்த பலரும், பாரதி கண்ட புதுமை பெண் போல் இருந்து, தைரியமா சுடுகாடு வரை சென்று அனைத்து உதவிகளை செய்துள்ளதை, பாராட்டினர்.
இது குறித்து பாக்கியலெட்சுமி கூறுகையில்,
ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதியம் உணவு கொடுத்து வருகிறேன் அப்ப சந்திராவிற்கும்,அவரது மகனுக்கும் கொடுப்பேன். ஆதரவற்ற நிலையில், மிகவும் ஏழ்மையுடன் இருப்பது குறித்து சந்திரா கூறுவார். தன் மகனுக்காவே தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறுவார். மகன் பிரிவை தாங்க முடியாமல் சந்திரா தவித்த தவிப்பை ஒரு பெண்ணாக என்னால் உணர முடிந்தது. அதுவே என்னை சுடுகாடு வரை செல்ல வைத்தது.காரியம் முடிஞ்ச பிறகு அந்த துயரமான நேரத்திலும் உனக்கு பெரிய மனசும்மானு என்னை தழுவி கொண்டார்.ஆதரவுக்கு யாருமின்றி துயரத்தில் தவிப்பவர்களுக்கு நான் இருக்கேனு சொன்னாலே அவர்களுக்கு தானா நிம்மதி வந்து சேர்ந்துடும் என்றார்.