தஞ்சையில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற 2 சிறுவர்கள் கைது - ஒரு சிறுவன் தப்பியோட்டம்
’’போதைக்கும் மற்ற தேவைகளுக்கும் பணம் தேவைப்படுவதால், வீடுகளில் திருடி வருகின்றார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபவர்களை, கண்காணித்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும்'’

தஞ்சை அருகே வல்லத்தில் வீட்டுச்சுவர் ஏறி குதித்து திருட முயற்சி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ஒரு சிறுவனை தேடி வருகின்றனர். தஞ்சை அருகே வடக்குச் செட்டித் தெருவை சேர்ந்த பலராமன் என்பவரின் மகன் வினோத் (32). விவசாயி. சம்பவத்தன்று இவரது வீட்டு காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்த மர்ம நபர்கள் 4 பேர் ஆக்சா பிளேடால் கதவு தாழ்ப்பாளை அறுக்க முயற்சி செய்துள்ளனர். கதவின் தாழ்பாழை அறுக்கும் சத்தத்தை கேட்டது. இதனையறிந்த வினோத் வந்த போது, ஆட்கள் வருவதையறிந்த 4 பேரும் தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து வினோத் வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வல்லம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் முன்னையம்பட்டியை செல்வராஜ் என்பவரின் மகன் கார்த்தி (20), மற்றும் 13, 15, 17 வயதுகளை உடைய சிறுவர்கள் வினோத் வீட்டில் திருட முயற்சித்தது தெரிய வந்தது. தொடர்ந்து கார்த்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 15 மற்றும் 17 வயது சிறுவர்களை சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய 13 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், கடந்த சில நாட்களாக சிறுவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்கள் போதைக்கும் மற்ற தேவைகளுக்கும் பணம் தேவைப்படுவதால், வீடுகளில் திருடி வருகின்றார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபவர்களை, கண்காணித்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். அப்போது தான் அவர்கள் திருந்துவதற்கு வாய்ப்புள்ளது. இச்சிறுவர்களுடன் மேலும் வேறு யாருடனாவது தொடர்பில் உள்ளார்களா என விசாரணை நடத்தி வருகின்றோம். பெற்றோர்கள் வீட்டிலுள்ள தனது மகன்கள் யாருடன் நண்பர்களாக உள்ளார்கள், அவர்களது பழக்க வழக்கங்களை கண்காணிக்க வேண்டும். அவர்கள் மாற்று வழியில் சென்றால், உடனடியாக அதற்கு தகுந்தாற் போல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறைக்கு செல்லும் இவர்கள் வெளியில் வரும் போது நல்லவர்களாக வர வேண்டும் என்பதற்காகவே சிறார் பள்ளியில் சேர்க்கின்றனர். இது போல் சிறுவர்கள் கெட்டு போவதற்காக அவர்களது குடும்ப சூழ்நிலையும் காரணமாகின்றது.

எனவே, மாவட்ட நிர்வாகம் வெளியில் சுற்றி திரியும் சிறுவர்கள், போதை மற்றும் பல்வேறு பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களை கண்டறிந்து, உரிய ஆலோசனைகளை நடத்த வேண்டும், தவறும் பட்சத்தில் வருங்காலத்தில் மிகப்பெரிய குற்ற செயல்களை செய்யும் நிலைக்கு ஆளாவார்கள் என்றார்.
திண்டுக்கல்லில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 116 பவுன் நகைகள் மீட்பு





















