TN 12th Result 2022: மாற்றுத்திறனாளிகள் 100% பேர் தேர்ச்சி; தஞ்சையில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை..!
தஞ்சையில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு கேட்கும் திறனற்றோர் மேல்நிலைபள்ளியும், பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தஞ்சையில் உள்ள அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தால் யாரும் சாதிக்கலாம். பறவை போல் விண்ணிலும் பறக்கலாம் என்பதை நிரூபித்துள்ளனர் தஞ்சை மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவ, மாணவிகள்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ந் தேதி பிளஸ்-2 பொது தேர்வு தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் 107 மையங்களில் நடந்த பிளஸ்-2 தேர்வை 12 ஆயிரத்து 686 மாணவர்களும், 14 ஆயிரத்து 620 மாணவிகளும் என மொத்தம் 27 ஆயிரத்து 306 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். நேற்று காலை பிளஸ்-2 பொது தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தொடர்ந்து தஞ்சை மாவட்ட பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம் 92.14 ஆகும். மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 96.90 ஆகும். மொத்தம் சராசரியாக 94.69 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் 99 அரசுப்பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வை எழுதினர். இதில் தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்படி தஞ்சை மாவட்டத்தில் 13 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
முக்கியமாக தஞ்சையில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு கேட்கும் திறனற்றோர் மேல்நிலைபள்ளியும், பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளியும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகளின் தன்னம்பிக்கை, விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே இதை கூற வேண்டும். இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பரவல் நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றாலும் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவிக்கப்பட்டது. 2019ம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்தில் 91.05 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 94.69 மாணவ- மாணவிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கு சென்று நேரடி வகுப்புகளில் பங்கேற்றது இரண்டு வருடமாக தடைப்பட்டாலும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் வெற்றி அபாரமாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்