4 ஆண்டுகளில் தஞ்சாவூர் விதை தரக்கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொண்டுள்ள சூப்பர் பணிகள்
கடந்த 4 ஆண்டுகளில், விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 745 மெட்ரிக் டன் அளவுள்ள 382 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் விதை தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு கடந்த 4 ஆண்டுகளாக செய்து வரும் சாதனைகள் விவசாயிகள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
தரமான விதைகள் விவசாயிகளுக்கு கிடைக்க செய்திடும் பொருட்டு விதை ஆய்வு பிரிவு தஞ்சாவூர் மாவட்ட அளவில் விதை ஆய்வு துணை இயக்குநர் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. விதைச் சான்றழிப்பு மற்றும் உயிர்மச்சான்று துறையின் விதைச் சட்டம் அமலாக்க பணியினை விதை ஆய்வு துணை இயக்குநர் செயல்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க, விதை ஆய்வு பிரிவு விதை விற்பனையாளர்களுக்கு விதை உரிமம் வழங்குதல், விதையின் தரத்தினை உறுதி செய்திட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தல், விதையின் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு விதை விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் பகுப்பாய்விற்காக எடுத்தல்.

விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி அளித்தல், பணிவிதை மாதிரிகள் பகுப்பாய்விற்கு அனுப்பிட விதை விற்பனையாளர்களை ஊக்குவித்தல், தரமற்ற விதை குவியல்கள் மீது விதை சட்டத்தின்படி துறை ரீதியாகவும், நீதிமன்றம் மூலமாகவும் நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
விதை சட்ட அமுலாக்கம், விதைச் சான்றழிப்பு மற்றும் உயிர்மச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவு விதைச்சட்டம் 1966, விதை கட்டுப்பாட்டு 1983 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 அமலாக்கம் செய்து வருகிறது. விதைக்கட்டுப்பாட்டு ஆணையின் படி விதை கொள்முதல் செய்தல் , இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றிற்கு விதை விற்பனை உரிமம் வழங்கப்படுகிறது. விதை விற்பனை நிலையங்களிலிருந்து விதை ஆய்வாளர்கள் மூலம் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்காக விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி தரத்தினை உறுதி செய்கிறது. தரமற்ற விதைக் குவியல்கள் கண்டறிதல், விற்பனை தடை உத்தரவு பிறப்பிப்பதோடு, உரிய நபரின் மீது விதைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சான்று பெற்ற விதைகள் பயன்பாடு மற்றும் முக்கியத்துவம், விதைச்சட்ட அமுலாக்கம், விதைப்பரிசோதனையின் நோக்கம் மற்றும் விதை விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய பயிற்சியானது விதை ஆய்வாளர்களால் வழங்கப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்படி 2021-22 முதல் 2014-25 வரையிலான கடந்த 4 ஆண்டுகளில் விதைகள் கட்டுப்பாட்டு ஆணை, 1983 இன் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்களுக்கு 602 விதை விற்பனை உரிமங்களை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விதை விற்பனை நிலையங்கள் விதை ஆய்வாளர்கள் மூலம் 12448 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விதைக் குவியல்களிலிருந்து கடந்த 4 ஆண்டுகளில் 9437 அலுவலக விதை மாதிரிகள் மற்றும் 3400 பணிவிதை மாதிரிகள் முளைப்புதிறன் ஆய்வுக்காக எடுக்கப்பட்டுள்ளது. அறிவிக்கை செய்யப்பட்ட விதைப் பரிசோதனை ஆய்வகத்தில் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு தரமற்ற விதைக் குவியல்களுக்கு எதிராக 429 துறை நடவடிக்கைகள் மற்றும் 26 சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 745 மெட்ரிக் டன் அளவுள்ள 382 லட்சம் மதிப்புள்ள விதைகளுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தரமற்ற விதைகளை உற்பத்தி செய்த உற்பத்தியாளர் மற்றும் விற்பனை செய்த விதை விற்பனையாளர்கள் மீது நீதிமன்றத்தில் 26 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அனைத்து 26 வழக்குகள் விதை சட்ட விதிகளின்படி முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















