TN Weather Alert: கதற விடும் கடும் குளிர்.! மீண்டும் சென்னையில் மழை பெய்யுமா.? டெல்டா வெதர்மேன் சொல்லுவது என்ன.?
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இந்தாண்டு அக்டோபர் 16ஆம் தேதியே வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆரம்பமே அடுத்தடுத்து ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் காரணமாக மழையானது தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கியது. இதனால் பரவலாக நல்ல மழை கிடைத்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் பெரும்பாலான நாட்கள் வறண்ட வானிலையே நீடித்து வந்தது. இந்த நிலையில் தான் இலங்கை அருகே உருவான டிட்வா புயலால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்தது.
சென்னையில் கடும் பனி
குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்கள் வரை மழை நீடித்தது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில்,கடும் குளிரானது நீடித்து வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எப்போதும் ஜனவரி மாதம் தான் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் தற்போதே பனியின் தாக்கம் தீவிரமாக இருப்பதால் வடகிழக்கு பருவமழை முடிவிற்கு வந்துவிட்டதா.? இனி சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை
இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள பதிவில், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கையை கடல்பகுதி நோக்கி நகரக்கூடும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான இடங்களில் இன்று தினம் (09.12.2025) வறண்ட வானிலையே நீடிக்கும் என தெரிவித்துள்ளார். இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் பல இடங்களில் மிதமானது முதல் சற்றே கனமழை வரையிலும், ஒருசில இடங்களில் கனமழையும் பதிவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வட மாவட்டங்களில் மழை எப்போது.?
எனவே திருவாரூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்ட விவசயிகள் மட்டும் இன்றும், நாளையும் வேளாண்மை பணிகளை தள்ளி வைப்பது நல்லது என குறிப்பிட்டுள்ளவர், பிற அனைத்து மாவட்ட விவசாயிகளும் அனைத்து விதமான வேளாண்மை பணிகளையும் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். அதே நேரம் வடமாவாட்டங்கள், உள் மாவட்டங்களில் வேளாண்மை பணிகளை பாதிக்கும் அளவிற்கு டிசம் 15 வரை மழை வாய்ப்பு இல்லையெனவும் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.





















