காலையில் வெயில் மாலையில் மழை... நனைந்து வீணாகிறது செங்கல்: மண்ணும் கரைந்து ஓடுவதால் உற்பத்தியும் பாதிப்பு
செங்கல் உற்பத்தியை நம்பி குறிப்பிட்ட நாட்களுக்கு என்று வேலைக்கு ஆட்களை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வந்துள்ளோம். ஆனால் திடீர் திடீரென்று பெய்யும் மழையால் பணிகள் தடைபட்டுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உற்பத்தி செய்யப்பட்டுள்ள செங்கற்கள் மழையில் நனைந்து வீணாகாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு பணியாளர்கள் மூடியுள்ளனர். மழை தொடர்ந்தால் அறுத்து வைத்துள்ள செங்கற்கள் மழையில் கரைந்து விடும் நிலை உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையாலும், இயற்கை இடர்பாடுகளாலும் விவசாயிகள் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். விவசாயிகள் ஒருபுறம் இதுபோன்று இயற்கை இடர்பாடுகளால் அவதியுற்று வருவதால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
வீடு கட்டுமான பணிகள் அதிகரிப்பதால் முக்கிய மூல பொருளான செங்கல் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் விலையும் எகிற ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கும்பகோணத்தில் செங்கல் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கும்பகோணம் பகுதியில் பட்டீஸ்வரம், உடையாளூர் போன்ற பகுதிகளில் களிமண்ணுடன், மணல் கலந்து செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் வளம் உள்ளது. கும்பகோணத்தில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் செங்கல் உற்பத்தி பணிகள் தொடங்கியது.
மழைக்கான அறிகுறி இல்லாததால் தேவைக்கு ஏற்ப பணியாளர்கள் செங்கல் உற்பத்தியை செய்தனர். இந்நிலையில் தற்போது கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகலில் வெயில் அடிப்பதும், மாலையில் மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது. வெயிலை நம்பி செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு இந்த மழை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மண் கலவை தயார் செய்து செங்கல் அச்சில் வைத்து அறுத்து காயவைத்து சூடுபடுத்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து வீணாக தொடங்கியது. இதனால் செங்கல் காலவாயில் தங்கியிருந்து வேலைபார்க்கும் பணியாளர்கள் கவலையடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ய தொடங்கியதும் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.
உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த மண் மழைநீரில் கரைந்து ஓடியது. பல இடங்களில் சூளைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காய வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கும்பகோணம் உடையாளூர் பகுதியில் செங்கல் காலவாய் அமைத்துள்ளவர்கள் தரப்பில் கூறுகையில், இந்த ஆண்டு கோடைக்காலத்தையும் தாண்டி ஆடி, ஆவணியில் தொடர்ந்து வெயில் அடித்ததால் செங்கல் உற்பத்தியை தொடங்கினோம். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தயார் செய்யப்பட்டு சூடுபடுத்த வேண்டிய செங்கல்கள் சேதமடைந்துள்ளது.
வீடு கட்ட செங்கல் தான் உகந்தது. மேலும் தற்போது இதன் தேவை அதிகமான உள்ளது. சிமெண்ட் கற்கள் வந்தாலும் புதிதாக வீடு கட்டுபவர்கள், செங்கற்களைதான் விரும்புகின்றனர். செங்கல் உற்பத்தியை நம்பி குறிப்பிட்ட நாட்களுக்கு என்று வேலைக்கு ஆட்களை வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வந்துள்ளோம். ஆனால் திடீர் திடீரென்று பெய்யும் மழையால் பணிகள் தடைபட்டுள்ளது.
இதனால் கூலியை நிறுத்த முடியாது. வெளியூர் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் மற்றும் கூலி ஆகியவற்றை கொடுக்க வேண்டும். ஒரு செங்கல் தயாராக சுமார் 15 நாட்கள் வரை ஆகும். செங்கற்கள் மழையில் நனையாமல் இருக்க கூரை அமைத்தும், தார்ப்பாய் கொண்டு மூடியும் பாதுகாத்து வருகிறோம். இருப்பினும் மழைநீரில் உற்பத்திக்காக வைத்திருந்த மண் கரைந்து போய்விட்டது. இதுவும் நஷ்டம்தான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.