திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடை ஞாயிறு விழா- ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடல்
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடை ஞாயிறு விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரத்தில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற பிறையணியம்மன் சமேத நாகநாதசுவாமி கோயிலாகும். தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும்.இக்கோயிலில் ராகு,தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலமாகும். இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால், அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்கு பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம். இக்கோயிலில் இவருடைய அமர்ந்த நிலையிலான சிலை உள்ளது. உருத்திராக்க மாலையோ அணிகலன்களோ இல்லாமல் உள்ள இந்த சிலையின் அருகே இவரது தம்பியான பாலறாவாயரின் உருவச்சிலையும், இவரது தாயாரின் உருவச்சிலையும் உள்ளன.
பெரிய பிரகாரத்தின் தென் மேற்கு மூலையில் ராகு சன்னதி உள்ளது. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிஷ்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார். நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேஷ தலம் என்ற பெருமை உடையதாகும். சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.
பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம்ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக ராகு பகவானுக்கு அணிவித்து இவரதுபெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.நாகராஜனான வாசுகியும்,இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.
இத்தகைய சிறப்பு பெற்ற திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடை ஞாயிறு விழா கொடியேற்றம் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி திருமண் எடுத்தல், முளைப்பாலிகையிடுதல், திருக்காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் நடைபெற்றது.முன்னதாக கடந்த 3 ந்தேதி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மங்களவாத்தியங்கள் முழங்க விழா கொடியேற்றப்பட்டது. அப்போது கொடிமரம் அருகே உற்சவரான சோமஸ்கந்தர் குரிகுஜாம்பிகையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, கடந்த 10-ம் தேதி வரை உற்சவர் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் கோயில் உள்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.
கடந்த 11-ம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் தேரோட்டமும், காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், மதியம் 2 மணிக்கு, கோயிலின் உள்ளே உள்ள சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது அஸ்ரத்தேவருக்கு 21 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டு நாகநாத நாகநாத என கோஷமிட்டு, புனித நீராடினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். கார்த்திகை கடைமுழுக்கு என்பது இக்கோயிலில் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. அப்போது கோயில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். கடந்தாண்டு கொரோனா தளர்வின்போது கூட குளத்தில் பக்தர்களை புனித நீராட அனுமதி வழங்கினர். ஆனால் கோயிலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராட காத்திருந்தும் அவர்களை குளத்துக்குள் புனித நீராட விடவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே விட்டனர். இதனால் கரைகளில் காத்திருந்த பக்தர்கள் வேதனையோடு பஞ்சமூர்த்தி சுவாமிகளை மட்டும் தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.