தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ஸ்கேனர் வசதி: பயணிகள் வரவேற்பு
தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிகம் பணிக்கு செல்ல ரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். தஞ்சாவூர் ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சை ரயில் நிலையத்தில் முதன்முதலாக பயணிகள் உடமைகளை பரிசோதிக்கக்கூடிய அதிநவீன ஸ்கேனர் வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது என்று தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் மிகவும் பழமைவாய்ந்த ரயில் நிலையங்களில் தஞ்சை ரயில் நிலையமும் ஒன்றாகும். தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்டது. தஞ்சை வழியாக சென்னை, ராமேஸ்வரம், திருப்பதி, வாரணாசி, பெங்களூரு, புதுச்சேரி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, செங்கோட்டை போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும், தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் மயிலாடுதுறை, திருச்சி, நாகை, நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற இடங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும், பயணிகள் ரயில்களும் இயக்கப்படுகிறது.
தினமும் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுவதால் தஞ்சை ரயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகிறது. பஸ் கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் ரயில்களில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உட்பட பல பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிகம் பணிக்கு செல்ல ரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இதனால் தஞ்சாவூர் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
தற்போது அம்ரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தஞ்சை ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தஞ்சைக்கு வருகின்றனர். இப்படி மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் தஞ்சை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படாமல் இருந்தது. அதாவது மெட்டல் டிடெக்டர் கருவிகள் எதுவும் கிடையாது. ஓரிரு போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படையினர் மட்டுமே பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த ரயில்வே துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தஞ்சை ரயில் நிலையத்தில் உடைமைகளை பரிசோதிக்கக்கூடிய ஸ்கேனர் இது வரை இல்லாமல் இருந்தது.
தற்போது பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தஞ்சை ரயில் நிலையத்தில் மிக முக்கிய நுழைவு வாயிலில் அதிநவீன ஸ்கேனர் முதன் முதலாக நிறுவப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்ட இந்த ஸ்கேனர் ஒரு மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட உடைமைகளை சோதிக்கும் திறன்மிக்கது. சிறப்பான கண்காணிக்கும் திறன் உடையது. ஆரஞ்சு, பச்சை, நீலம் ஆகிய வண்ணங்களில் பொருட்களை குறித்து அடையாளப்படுத்தும். இந்த ஸ்கேனர் போலீசாரின் பாதுகாப்புக்கு மிகவும் உதவும் என்பதால் பயணிகள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், இந்த ஸ்கேனர், பயணிகளின் உடைமைகளில் உள்ள வெடிபொருட்கள், ஆயுதங்கள் போன்ற ஆபத்தான பொருட்களைக் கண்டறிய உதவுகிறது. இந்த ஸ்கேனர்கள் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை செய்கின்றன. பயணிகள் தங்கள் உடமைகளை ஒரு பிளேட்டில் வைத்து ஸ்கேனர் எந்திரத்தில் செலுத்துவார்கள்.. எந்திரம் உடமைகளை ஸ்கேன் செய்து, திரையில் அதன் உருவத்தைக் காட்டும். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உருவத்தைப் பார்த்து, ஏதேனும் ஆபத்தான பொருள் இருக்கிறதா? என்று சோதிப்பார்கள்.
தஞ்சை ரயில் நிலையத்தில் முதன்முதலாக இந்த ஸ்கேனர் நிறுவப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக அமையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






















