கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி தொடக்கம்
மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து, மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சியை கும்பகோணம் மகாமககுளம் தென்கரை திருமண மண்டபத்தில் தொடங்கியது.
கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி தொடங்கியது. இதில் 50 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து, மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சியை கும்பகோணம் மகாமககுளம் தென்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது. கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை அரசு கொறடா கோவி செழியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை, உதவி இயக்குநர் இரா.கிரிஜாராஜ் தலைமை வகித்து பேசுகையில், இக்கண்காட்சி வரும் ஜனவரி 12 ஆம் தேதி முடிய 15 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், திருச்செங்கோடு, விருதுநகர், சேலம், திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி கண்காட்சியில் கண்கவர் டிசைன்களில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற அசல் ஜரிகை பட்டுப்புடவைகளும், ஆஃபைன் ஜரிகை பட்டுப்புடவைகளும், காட்டன் புடவைகளும், சுங்குடி உள்ளிட்ட பழமையான ரக சேலைகள், வேட்டிகள். போர்வைகள், பல வண்ண படுக்கை விரிப்புகள், துண்டுகள் மற்றும் கைலிகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. கைத்தறி கண்காட்சியில் வாங்கப்படும் பருத்தி ரக ஜவுளிகளுக்கு 30 சதவிதம் அரசு தள்ளுபடியும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 10 சதவித சங்க கழிவுடன் 30 சதவிதம் அரசு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பட்டு ரக ஜவுளிகளுக்கு 35 சதம் முதல் 65 சதம் வரை சிறப்பு கழிவு வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் 50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றார்.
இது குறித்து கைத்தறி வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், கைத்தறி கண்காட்சி நடைபெற்று வருகின்றது. பட்டு சேலைகளுக்கு புகழ்பெற்ற கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதி என்பதால், கைத்தறியில் தயாரிக்கும் அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், திருவிடைமருதுார், திருபுவனம் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள கைத்தறி நெசவுத்தொழில் செய்யும் ஊர்களில் இருந்து கும்பகோணத்தில் நடைபெறும் கண்காட்சியில் விற்பனை செய்வார்கள்.
மேலும் மார்கழி மாதம் என்பதால், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள சைவம் மற்றும் வைணவ கோயில்கள் அதிகமாக இருப்பதால், ஏராளமான வெளி மாநில,மாவட்த்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வதால், அவர்கள் கைத்தறி சேலைகள் உள்ளிட்டவைகளை ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். கடந்தாண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தற்போது கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக விற்பனையாகும் என்றார்.