(Source: ECI/ABP News/ABP Majha)
ஸ்பர்ஷ் ஓய்வூதியர்களே உங்கள் கவனத்திற்கு... வரும் 14ம் தேதி மறக்காதீங்க
பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும்.
தஞ்சாவூர்: 'ஸ்பர்ஷ்' பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் வரும் 14ம் தேதி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
ஸ்பர்ஸ் (SPARSH) மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA, Chennai) அலுவலகம் சார்பாக ஸ்பர்ஸ் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் வரும் 14ம் தேதி காலை 9 மணி முதல் தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தலைமை வகிக்கிறார். உயிர்சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும்.
ஓர்ரேங்க், ஓர்பென்ஷன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் ஆதார் விபரங்களை ஸ்பர்ஷ்-ல் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம் வரும் 14ம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர் தங்களது படைபணிச்சான்று. அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதார் அட்டை, பான்அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் அசல் உடன் நேரில் ஆஜராக கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த அரிய வாய்ப்பினை ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (ராணுவம், கடற்படை, விமானப்படை) மற்றும் அவர்களை சார்ந்தோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.