பூட்டிய வீட்டிற்குள் அக்கா, தம்பி மர்மமரணம்: உடல்கள் அழுகிய நிலையில் மீட்பு
நேற்று முன்தினம் இரவு முதல் இவர்களின் வீடு பூட்டி கிடந்துள்ளது. இன்று காலை வரை வீடு திறக்கப்படவில்லை. மேலும் சுவாமிநாதன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அக்ரஹாரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட அக்கா மற்றும் அவரது தம்பி என இருவரும் பூட்டிய வீட்டிற்குள் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலம் அக்ரஹாரத் தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன் (61). இவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துள்ளார். இவருடைய அக்கா பத்மாவதி (63). சிறு வயது முதல் மனநலம் மற்றும் உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவரை சாமிநாதன் கவனித்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் இவர்களின் வீடு பூட்டி கிடந்துள்ளது. இன்று காலை வரை வீடு திறக்கப்படவில்லை. மேலும் சுவாமிநாதன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சுவாமிநாதன் உறவினர் கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கிருஷ்ணமூர்த்தி பெங்களூரில் இருந்து இன்று காலை கதிராமங்கலத்திற்கு வந்தார். பின்னர் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பத்மாவதி, சுவாமிநாதன் 2 பேரும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். உடன் இதுகுறித்து பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலயறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பூட்டிய வீட்டிற்குள் இருவரும் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தனது சகோதரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சுவாமிநாதன் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தங்களை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்பதால் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருவரும் இறந்துவிட்டனரா என்பது பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.





















