சொல்லிடாதீங்க...! சொல்லிடாதீங்க...! இங்க நடக்கும் தவறுகளை மக்களிடம் சொல்லிடாதீங்க....சீர்காழி நகராட்சி
சீர்காழி நகர மண்ட கூட்டத்தில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருவதால் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் மறுக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 38வது கடைசி மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளில் அவ்வப்போது நகர மன்ற கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அக்கூட்டத்திற்கு செய்தியாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் பார்வையாளராக இருந்து கூட்டங்கள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நடைமுறை தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் சாதாரண நகர மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. கூட்டத்திற்கு நகர சபை தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுப்பராயன, நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகராட்சி மேலாளர் காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளநிலை உதவியாளர் ராஜ கணேஷ் மன்ற தீர்மானங்களை வாசித்தார்.
இந்நிலையில், சீர்காழி நகர மன்ற கூட்டத்திற்கு வழக்கம் போல் செய்தியாளர்களுக்கு தகவல் அளிப்பதை தவிர்த்து, செய்தியாளர்களுக்கு தகவல் இன்றி கூட்டம் ரகசியமாக நடைபெற்று உள்ளது. இதுகுறித்து ஒரு சில நகர மன்ற உறுப்பினர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நகர மன்ற கூட்டம் சரியான முறையில் நடைபெறவில்லை, கூட்டங்களிலும் கடும் வாக்குவாதங்களும், வெளிநடப்புகளும் நடைபெறுகிறது. கடந்த முறை நடந்த கூட்டத்தில் கூட நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நகர மன்றத்தில் உள்ள பாதிக்கு பாதி உறுப்பினர்கள் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அவர் அளித்த உத்தரவாதத்தின் பெயரில் போராட்டத்தை உறுப்பினர்கள் கைவிட்டனர்.
சீர்காழி நகர மன்ற தலைவர், ஆணையர் இருவரும் முறையாக கூட்டங்களை நடத்தாமல், உறுப்பினர்களின் கருத்துகள் இன்றி பொதுமக்களுக்கு எதிரான பல தீர்மானங்களை இயற்றி சீர்காழி நகரை சீரழித்து வருகின்றனர். இது போன்று சீர்காழியில் முறையாக குப்பைகள் அல்ல படாமலும், மின்விளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் முறையாக பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தரப்படவில்லை, இதனால் ஒவ்வொரு கூட்டத்திலும் அந்தந்த வார்டு உறுப்பினர்கள் இதுகுறித்து கேள்வி கேட்பது? அந்தப் பிரச்சினைகள் ஊடக துறையினர் மூலம் வெளி உலகத்துக்கும், அரசுக்கும் தெரிந்து விடுவதால், அதனை மறப்பதற்காக தற்போது பத்திரிகையாளர்களுக்கு அழைப்பின்றி கூட்டங்கள் ரகசியமாக நடத்தப்படுகிறது என தெரிவித்தனர்.
மேலும், கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய நகர மன்ற உறுப்பினர்கள் சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மே 24 -ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி தமிழக முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். ஆகையால், சீர்காழி சட்டை நாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு அரசு உள்ளூர் பொது விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று கோயிலில் நான்கு வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கோடை காலம் என்பதால் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க கூடுதலாக புதிய கை பம்புகள் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மக்கள் பிரச்சனை குறித்து விவாதிக்க கூடிய நகர மன்ற கூட்டத்தில், தங்களால் எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் பகுதி பிரச்சினைகளை கூட்டத்தில் விவாதிக்கிறார்களா என்ற தகவலை பொதுமக்களாகிய நாங்கள் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ளும் நிலையில், அவர்களின் தவறுகள் வெளி வந்து விடுமோ என்ற அச்சத்தில் செய்தியாளர்களை புறக்கணித்து ரகசியமாக நடத்துவதுவதை கடுமையாக கண்டிப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.