திருவாரூர் நகராட்சியில் பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி
’’தமிழ்ச்செல்விக்கு சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்’’
தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும், தொல்லைகளும், பள்ளி மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக அரசு சார்பில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழகம் முழுவதும் பாலியல் கொடுமைகளுக்கு தினந்தோறும் பெண்கள் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (30). தமிழ்ச்செல்விக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி கடந்த 5 ஆண்டுகளாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் சரம் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். தமிழ்செல்வி போன்று திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்விக்கு சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பணிக்கு வந்த தமிழ்ச்செல்வி மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த பின்னர் அவர் விஷம் அருந்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழ்செல்விக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் செல்வியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்ச்செல்வி கூறுகையில், தான் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தற்போது என்னுடைய ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நான் பலமுறை எனது உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளேன். அவர்கள் முத்துச்செல்வனை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று நான் பணியில் இருந்த பொழுது என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து தகாத முறையில் என்னிடம் நடந்து கொண்டார். அதனால் நான் மனம் உடைந்து அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தமிழ்ச்செல்வி கூறினார்.
மேலும் தமிழ்ச்செல்வி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் வேலை செய்யும் இடத்தில் விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.