ஆஹா சுள்ளுன்னு வெளுக்குது வெயிலு... கருவாடும் காயுது: உற்சாகத்தில் மீனவத் தொழிலாளர்கள்
ஒரு தொழிலும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் இயற்கையுடன் எவ்வாறு பிணைந்து காணப்படுகின்றனர் என்பதற்கு இந்த கருவாடு காய வைக்கும் தொழிலையே உதாரணமாக கூறலாம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் கருவாடு காய வைக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் மீனவ தொழிலாளர்கள். ஒரு மாதத்திற்கு பின்னர் கருவாடு காயவைக்கும் பணி நடந்து வருகிறது. கருவாடு காய வைக்க வெயில் முக்கியம். இப்போது சேதுபாவாசத்திரம் பகுதியில் சுள்ளென்று அடிக்கும் வெயிலால் மீனவ தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.
இந்த படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இறால், நண்டு, மீன்களை பிடித்து வருகின்றனர். இந்த மீன்களை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். அதேசமயம் இதில் கழிவாக கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வியாபாரிகள் வாங்கி துறைமுகத்திலேயே காயவைத்து கருவாடு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உணவிற்கு பயன்படும் கருவாடுகளை விட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறிய வகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.
இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழிப்பண்ணை வைத்துள்ளவர்கள் வாங்கி செல்கின்றனர். இது கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கருவாடு தயாரிக்கும் தொழிலால் பல்வேறு நிலைகளிலும் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1 மாதத்திற்கு மேலாக கடலோர பகுதியில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மேலும் கடந்த 15 தினங்களாக காற்றழுத்த தாழ்வு நிலையும், புயல் சின்னமும் உருவாகி கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கருவாடு காயவைக்க முடியாமல் தொழில் பாதிக்கப்பட்டது. இது இந்த தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மோந்தா புயல் கரையை கடந்த பிறகு கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு கருவாடு காயவைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவத் தொழிலாளர்கள் வெகு உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஒரு தொழிலும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் இயற்கையுடன் எவ்வாறு பிணைந்து காணப்படுகின்றனர் என்பதற்கு இந்த கருவாடு காய வைக்கும் தொழிலையே உதாரணமாக கூறலாம். சின்ன மீன் என்று ஒதுக்கப்படும் மீன் இன்ொரு உயிருக்கு உணவாகிறது. இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் இயற்கை ஒத்துழைத்தால்தான் வேலையே பார்க்க முடியும் என்ற நிலை. இப்ோது வெயில் சுட்டெரிப்பதால் கருவாடு காய வைக்கும் தொழிலாளர்கள் முகத்தில் ஒரு உன்னதமான மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மைதானே.
கருவாடு காயவைக்கும் தொழிலாளர்கள், அதை பக்குவமாக பார்சல் செய்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் என்று ஏராளமானோர் இதை நம்பியே உள்ளனர்.





















