Mutharasan: “செந்தில் பாலாஜி மீதான சோதனை நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது” - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வருமான வரித் துறையின் சோதனை நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வருமான வரித் துறையின் சோதனை நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கைது நடவடிக்கைக்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கும்பகோணத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் ஏற்கெனவே 8 நாள்கள் சோதனை நடத்தப்பட்டது. இப்போது அமைச்சரின் சொந்த வீடு, அரசால் வழங்கப்பட்ட வீடு, தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சரின் அறைக்குச் சென்று வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனைக்குத் தமிழக காவல் துறையைப் பாதுகாப்புக்கு அழைப்பதற்கு பதிலாக துணை ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது. இப்படியொரு மோசமான சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவை தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய இந்தத் துறைகள் மோடி, அமித்ஷா கூட்டணி சொல்வதை நிறைவேற்றுகிற அடிமை அமைப்புகளாகச் செயல்படுகின்றன.
நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராகவுள்ள எதிர்க்கட்சிகளை இந்த அமைப்புகளின் மூலம் அடக்கி ஒடுக்கி, ஜனநாயக படுகொலை செய்து, அதன் மூலம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அக்கட்சி அனைத்து தில்லுமுல்லு வேலைகளையும் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான் செந்தில் பாலாஜி வீடு முதல் தலைமைச் செயலகம் வரை சோதனை நடத்தப்பட்டது.
இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும் இச்சம்பவத்தைக் கண்டிக்க வேண்டும். இந்தச் சோதனை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செய்யப்படுகிறது. அதாவது பாஜகவை யார் எதிர்த்தாலும், வருமான வரித் துறையை வைத்து மிரட்டுவோம்; அமலாக்கத் துறையைக் கொண்டு அச்சுறுத்துவோம் என்ற அப்பட்டமான ஜனநாயக படுகொலையை பாஜக மேற்கொள்கிறது.
இது, தொடருமானால், மற்ற தோழமைக் கட்சிகளுடன் கலந்து பேசி, மத்திய அரசுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை, போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும். இவ்வாறு என்றார் முத்தரசன்.
வடக்கு மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் க. சுந்தர்ராஜன், கே. நாராயணன், ஒன்றியச் செயலர் ஏ.ஜி. பாலன், பொருளாளர் ப. சரவணகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.