மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை: அமைச்சர் ஆட்சியர்களுக்கு அதிரடி அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கத்தரிநத்தம் ஊராட்சி மன்ற விரிவாக்க கட்டிட அலுவலகம் மற்றும் கூட்ட அறை ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை வகித்தார். அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் திட்ட விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சிக்கு எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பேசுகையில், "தஞ்சை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை 75 புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இந்த கட்டிடங்கள் அனைத்தையும் நேரில் திறந்து வைப்பதன் மூலம் அந்தந்த பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக வாங்க முடிகிறது. தொடர்ந்து அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படுகிறது" என்றார்.
மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துசெல்வம், அம்மாபேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் தியாக ரமேஷ், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் தங்கமணி சுரேஷ் குமார் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து, ஆலங்குடி, புலவர்நத்தம், ராராமுத்திரக்கோட்டை, நல்லவன்னியன்குடிகாடு, நெல்லித்தோப்பு, எடவாக்குடி, பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ. 8.36 கோடி மதிப்புள்ள 40 புதிய கட்டடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவிற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது: பேரிடர் மேலாண்மை குறித்து கூட்டம் முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அதிகப்படியாக மழை பெய்தால் எனது அறிவுறுத்தலுக்கு எதிர்பார்க்காமல், விடுமுறை விடுவது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
இடிந்த கட்டடம், ஊறிப்போன காம்பவுண்ட் சுவர், வெடிப்பு விட்ட கட்டடங்கள், மின்சாரம், மூடப்படாமல் உள்ள குழிகள் போன்றவற்றை பாதுகாப்பாக மாற்றி அமைக்க வேண்டும் என மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31 ஆயிரம் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். உணவு இல்லை என்பதால் பள்ளிகளுக்கு செல்லவில்லை என குறைபாடுகள் இருக்க கூடாது என்பதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை தெலங்கானா உயர் அலுவலர்கள் பார்த்துவிட்டு சென்றதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திலும் அரசு தொடங்கியுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தை பொறுத்தவரை மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 64 லட்சம் பெண்கள், தாங்கள் வசதி வாய்ப்புடன் இருப்பதால், உரிமை தொகை வேண்டாம் என தெரிவித்துள்ளனர். தகுதி உள்ளவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டு செய்யவும் கூறியுள்ளோம்.
மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை வழங்கலாம். அவ்வாறு வழங்கப்படும் மனுக்களில் தகுதி உடையவராக இருந்தால் விட்டு விடாமல் கிடைக்க கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.